அஜித், அமீர் கான், விஷ்ணு விஷால் ட்விட்டர்
தமிழ்நாடு

வெள்ளத்தில் சிக்கிய அமீர் கான்.. ஓடிச் சென்று சந்தித்த அஜித்! விஷ்ணு விஷால் நெகிழ்ச்சிப் பதிவு

நடிகர் அஜித், நேரில் சென்று உதவி செய்ததற்கு, நடிகர் விஷ்ணு விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.

Prakash J

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 36 மணிநேரத்திற்குத் தொடர்ச்சியாக பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இடைவிடாமல் பெய்த மழையால் சென்னையின் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீரானது வீடுகளில் புகுந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

புயல்

நேற்று இரவு முதல் மழை குறைந்து இன்று காலை முதல் வெயில் அடிக்க துவங்கியுள்ளது. மழை நின்ற போதும் மக்கள் படும் துயரங்கள் நின்றபாடில்லை. அரசு தரப்பில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தபோதும் பல இடங்களில் தங்களுக்கு இன்னும் உதவிகள் கிடைக்கவில்லை என்ற புகார்கள் எழுந்து வருகின்றன. பல இடங்களில் வீடுகள், கடைகள், சாலைகளை இன்னும் வெள்ளம் சூழ்ந்த வண்ணமே உள்ளன. தன்னார்வலர்கள் பலரும் மீட்பு பணிகளில் உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில்தான், நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய வீட்டில் வெள்ளத்தில் சிக்கியிருப்பதாகவும், உதவிக்கு அழைத்திருப்பதாகவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து நடிகர் விஷ்ணு விஷால், “காரப்பாக்கத்தில் இருக்கும் எனது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து நீரின் மட்டம் மிக மோசமாக உயர்ந்து வருகிறது. உதவிக்கு அழைத்துள்ளேன். இங்கு மின்சாரம், வைஃபை மற்றும் போன் சிக்னல் என எதுவுமே இல்லை.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் மொட்டை மாடியில் மட்டுமே எனக்கு சில சிக்னல் கிடைக்கிறது. எனக்கும் இங்குள்ள பலருக்கும் ஏதாவது உதவி கிடைக்கும் என்று நம்புகிறோம். சென்னை முழுவதும் உள்ள மக்களின் நிலையை என்னால் உணர முடிகிறது. மக்கள் அனைவரும் தைரியமாக இருங்கள்” என பதிவிட்டிருந்தார்.

விஷ்ணு விஷாலின் எக்ஸ் தள பதிவிற்கு பிறகு காரப்பாக்கம் விரைந்த மீட்பு படையினர், அங்கிருந்த விஷ்ணு விஷாலோடு அமீர்கானையும் மீட்டுள்ளனர். தன் தாயாரை சென்னை மருத்துவமனையில் சேர்த்திருக்கும் அமீர்கான், அருகிலிருந்து அவரை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக சில மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு குடிபெயர்ந்தார். இந்நிலையில் வெள்ளத்தில் அவரும் சிக்கிக்கொண்டுள்ளார். விஷ்னு விஷால்ல் மற்றும் அமீர்கான் இருவரையும் மீட்ட தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பான இடத்திற்கு அவர்களை கொண்டுசென்றனர். இதையடுத்து, தங்களை மீட்டதற்காக விஷ்ணு விஷால் நன்றி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமீர் கான் சென்னையில் சிக்கிக் கொண்டிருப்பதை தெரிந்துகொண்ட நடிகர் அஜித், நேரில் சென்று உதவி செய்திருக்கிறார். அமீர் கானை விசாரித்த அஜித், எல்லோருக்கும் போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்து கொடுத்து உதவி இருக்கிறார். அந்த போட்டோவை வெளியிட்டு நடிகர் விஷ்ணு விஷால் அஜித்துக்கு நன்றி கூறி இருக்கிறார்.

இதுகுறித்து விஷ்ணு விஷால் தன்னுடைய எக்ஸ் தளத்தில், “எங்கள் நிலை பற்றி பொதுவான நண்பர் மூலம் அறிந்த, எப்போதும் உதவக்கூடியவரான நடிகர் அஜித் சார், எங்கள் வில்லா நண்பர்களுக்கு போக்குவரத்து உதவிகளை ஏற்பாடு செய்தார். லவ் யூ அஜித் சார்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: “கோ மூத்திர மாநிலங்கள்”-திமுக எம்பி செந்தில்குமார் பேச்சால் வெடித்த சர்ச்சை! நடந்ததுஎன்ன? முழுவிபரம்