கடந்த ஆண்டு நடந்த 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு (தொகுதி வாரியாக), விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சென்னையில் கடந்த ஜூன் 17ஆம் தேதி கல்வி விருது விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய தொகுதி பொறுப்பாளர்களை பனையூரில் உள்ள விஜய் மக்கள் நிலைய இயக்க அலுவலகத்திற்கு அழைத்து பாராட்ட முடிவு செய்திருந்தார் விஜய். இதையொட்டி நேற்று மதியம் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிலிருந்து கார் மூலம் பனையூர் அலுவலகத்திற்குச் சென்றார் அவர்.
அப்போது வீடு மற்றும் அலுவலகத்தில் அதிக அளவில் ரசிகர்கள் கூடியதால் சாலையில் பொதுமக்கள் அதிகளவு கூடி விடுவார்கள் என்ற அச்சத்தில் அவரின் கார் சாலையில் வேகமாக சென்றது. இதில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் சிக்னலை மதிக்காமல் சென்றதால், விஜய்யின் வாகனம் சிக்னலை மீறியதாக 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு அவருக்கு செலான் அனுப்பப்பட்டுள்ளது.
அவரின் கார் வேகமாக சென்றதும் சிக்னலை மதிக்காமல் சென்றதும் தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பப்பட்ட நிலையில், அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்வதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நடிகர் விஜய் கடந்த முறை காரில் பயணித்த போது கார் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருந்ததற்காக ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது அதற்கான பணத்தையும் செலுத்தி உரிய விளக்கமும் விஜய் தரப்பில் அளிக்கப்பட்டது.