தமிழக அரசியல் களத்தில் இன்றைய நாள் மிக முக்கியமான நாள்.. திரைத்துறையிலிருந்து விலகுவதாக அறிவித்து நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு இன்று நடைபெற இருக்கிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியின் வி.சாலை பகுதியில் மிகவும் பிரமாண்டமாக மாநாடு நடத்த தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஏற்பாடுகளை செய்துள்ளார். மாநாடு ஏற்பாடுகளை நேற்றிரவு திடீரென ஆய்வு செய்த அவர், மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் அனைவருக்கும் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்வையிட்டார்.
தமிழக வெற்றிக்கழக மாநாடு திடலின் முகப்பில் சுதந்திர போராட்ட தலைவர்களது கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. பெண் ஆளுமைகளை போற்றும் வகையில் வீரமங்கை வேலுநாச்சியார், தென்னகத்து ஜான்சிராணி அஞ்சலை அம்மாள் ஆகியோருக்கும் கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய்க்கான பாடல் இன்று வெளியிடப்பட இருக்கிறது.
மண்ணை உயர்த்திட, மக்களை உயர்த்திட வந்த தலைவர் என்ற வரிகளுடன் அந்த பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழக வெற்றிக்கழகம்- தமிழ்நாட்டின் வெற்றித்திலகம் என்ற வரியும் அதில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு நடிகர் விஜய் களமாடிவரும் சூழலில், மாநாட்டின் முகப்பு ஜார்ஜ் கோட்டை வடிவில் அமைக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது. மாநாட்டுப் பந்தலில் 700க்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. 3000 காவல்துறையினருடன் தமிழக வெற்றிக்கழக தொண்டர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.