சொகுசு கார் மீதான நடிகர் விஜய் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டு நடிகர் விஜய் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த 63 லட்சம் ரூபாய் மதிப்பிலான காருக்கு, நுழைவு வரி செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டு இருந்தது. பொதுவாக கார் இறக்குமதி செய்யப்பட்ட மாதத்தில் இருந்து அபராதமாக 2 சதவீதம் மட்டுமே கணக்கிட வேண்டும், ஆனால், 40 சதவீதம் கணக்கிட்டு இருப்பதாக விஜய் தரப்பில் கூறப்பட்டது. இதனால், அபராதத்தை ரத்து செய்யக் கோரி விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நீதிபதி சுரேஷ்குமார் இன்று தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பின்படி `இறக்குமதி செய்யப்பட்ட பி.எம்.டபிள்யூ காருக்கான நுழைவு வரி மீதான அபராதத்தை, 2005-ம் ஆண்டிலிருந்து வசூலிக்கக்கூடாது. 2019-ம் ஆண்டின் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு நுழைவு வரி செலுத்தாத காலத்திற்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும்’ என்று வணிக வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் விஜயின் கார் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.