படப்பிடிப்பில் இருந்து அழைத்து வந்து வருமான வரித்துறை சோதனை நடத்தியது சரியில்லை என்றால், விஜய் வழக்கு தொடரலாம் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி யோசனை தெரிவித்துள்ளார்.
‘பிகில்’ படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனையை தொடங்கியது. அதேபோல், படம் தயாரிக்க கடன் கொடுத்த பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடைபெறுகிறது.
நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யிடம் சம்மன் கொடுத்து விசாரணையை தொடங்கினர் வருமான வரித்துறையினர். பின்னர் அங்கிருந்து அவரது காரிலேயே சென்னை அழைத்து வந்து, இரவு முழுவதும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இன்றும் தொடர்ந்து நடைபெற்ற சோதனை சற்று நேரத்திற்கு முன்பே நிறைவடைந்தது.
இந்நிலையில், படப்பிடிப்பில் இருந்து அழைத்து வந்து வருமான வரித்துறை சோதனை நடத்தியது சரியில்லை என்றால் விஜய் வழக்கு தொடரலாம் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி யோசனை தெரிவித்துள்ளார். வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து விஜய் வழக்கு தொடரலாம் எனவும் ஒன்றும் இல்லையென்றால் விஜய் ஏன் கவலைப்பட வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.