நடிகர் தியாகு
“விஜயகாந்த் அன்புக்கு ரொம்ப ஏங்குவார். யாரிடமும் லேசுல பழக மாட்டார். ஆண்டவன் அவரோட பழகுற வாய்ப்ப கொடுத்ததுக்கு நன்றி சொல்லிக்கிறேன். சில விசயங்களை வெளியில சொல்ல முடியாது. நட்புக்கு அவ்வளவு மரியாதை கொடுப்பார். யாரா இருந்தாலும் சரி, கஷ்டம்னு வந்துட்டா உதவி செய்வதில் அவருக்கு நிகர் அவரே” என்றார் நடிகர் தியாகு.
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
“அரசியல்வாதியாக, சினிமா நடிகராக, சகோதரனாக என்று பன்முகம் கொண்டவராக விஜயகாந்த் இருக்கவே மாட்டார். அவருக்கு எப்போதும் ஒரே முகம்தான். அதுவும் நல்ல முகம் அவ்வளவுதான். ஞாயிற்றுக் கிழமை மற்றும் விழா காலங்களில் அவர் தொண்டர்களை சந்திப்பார். அப்போது அவரது வீட்டில் தொண்டர்கள் குவிந்து விடுவார்கள். இன்னும் அவர் நல்லா இருந்திருந்தால் அரசியலில் பல சூழ்நிலை மாற்றங்களை கொண்டுவந்திக்க முடியும்” என்றார் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.
கவிஞர் வைரமுத்து
“விஜயகாந்த்தின் பெரிய சிறப்பு, பொது வாழ்க்கையில் ஒன்று உண்டு. ரொம்ப யோசித்துப் பார்த்தால் அதுதான் அவருக்கு மிகப்பெரிய தனி அடையாளம் என்று நான் கருதுவேன். ‘கலைஞர் மறையட்டும், ஜெயலலிதா மறையட்டும் அதற்குப் பிறகு அரசியலைப் பற்றி நாம் யோசிக்கலாம்’ என்று பல பேர் கருதியிருந்த காலத்தில், கலைஞர், ஜெயலலிதா என்ற இருபெரும் ஆளுமைகளும் அரசியலில் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அரசியலில் குதித்தவர் விஜயகாந்த் அவர்கள். எதிர்க்கட்சித் தலைவர் என்ற உயரம் வரைக்கும் அவர் பொதுவாழ்வில் பூத்துவிட்டார். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவரை நில்லென்று சொல்லி நிறுத்தி எடுத்துக் கொண்டது காலம்” என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.