சமீபத்தில் நீட் தேர்வு தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டிருந்த கருத்தில் "எந்தவித உள்நோக்கமும் இல்லை. எதார்த்தமான வார்த்தை. அதை நீதிமன்றங்கள் பெரிதுபடுத்தக்கூடாது" என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், "நீதிமன்றத்தை அவதிக்கும் எண்ணத்தில் பேசவில்லை. ஆகவே நீதியரசர்கள் இதை விட்டுவிட வேண்டும். மக்களின் பிரதிபலிப்பையே நடிகர் சூர்யா பேசியுள்ளார். இதை கருத்துச் சுதந்திரமாகவே எடுத்துக்கொள்ளவேண்டும். எதார்த்தமாகப் பேசியதை பெரிதுபடுத்தவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்" என்றும் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வு பற்றிய பயத்தின் காரணமாக மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இதுபற்றி சூர்யா வெளியிட்ட அறிக்கையில், "கொரோனா அச்சத்தால் உயிருக்குப் பயந்து 'வீடியோ கான்பிரன்ஸிங்' மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுதவேண்டும் என்று உத்தரவிடுகிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.
சூர்யா வெளியிட்ட கருத்துக்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும் என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு கடிதம் எழுதியிருந்தார்.