Actors Surya and Karthi pt desk
தமிழ்நாடு

"வேட்டையன் படமும் வருது.. மூத்தவர் ரஜினிக்கு வழிவிடுவதுதான் சரியாக இருக்கும்; அதனால்.." - சூர்யா

வேட்டையன் திரைப்படம் வருவதால் மூத்தவர் ரஜினிக்கு வழிவிட்டு கங்குவா திரைப்படம் வெளியாகும் தேதி தள்ளிப் போவதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

webteam

செய்தியாளர்: பிரவீண்

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் பெரும் பொருட்செலவில் தயாராகியுள்ளது. இந்த திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

கங்குவா திரைப்படம் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதே தேதி ரஜினி நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படமும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

vettaiyan

இரண்டு திரைப்படமும் ஒரே நாளில் வெளியாவது ஏதாவது ஒரு படத்திற்கு நிச்சயம் பாதிப்பை உண்டாக்கும். அதனால், யாராவது ஒருவர் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில, நடிகர் கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது.

அதில் பேசிய நடிகர் சூர்யா, ”கடந்த 50 வருடங்களாக தமிழ் சினிமாவின் அடையாளமாக இருப்பவர் மூத்தவர் ரஜினிகாந்த். அக்டோபர் 10ஆம் தேதி அவரது வேட்டையன் வருவது தான் சரியாக இருக்கும். நான் பிறக்கும்போது சினிமாவில் நடிக்க வந்தவர் அவர்.

ரஜினி 50 வருடங்களாக தமிழ் சினிமாவின் அடையாளமாக இருப்பவர். மூத்தவர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம் அக்டோபர் 10ல் வருவது தான் சரியாக இருக்கும் என நான் நினைக்கிறேன்” என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ”கங்குவா ஒரு குழந்தை; அது பிறக்கும் போது தான் பிறந்தநாள்.. அதனை பண்டிகையாக்க நீங்கள் என்னுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்” என பேசினார்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசுகையில், “திரைத்துறையில் உள்ள அனைவருடனும் நட்புடன் இருப்பவர் சூர்யா. யாருடைய மனதையும் அவர் காயப்படுத்த நினைக்கமாட்டார். கங்குவா திரைப்படம் இந்திய சினிமாவின் பெருமையாக இருக்கும். புதிய ரிலீஸ் தேதி தொடர்பான தகவல் விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.

அக்டோபர் 10 ஆம் தேதி கங்குவா ரிலீஸ் ஆகும் என சூர்யா ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கங்குவா தள்ளிப்போவதால் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் சோலோவாக ரிலீஸ் ஆகிறது. தென்னிந்திய அளவிலும் போட்டிக்கு வேறு படம் இல்லையென்றே தெரிகிறது. அதனால், அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியாக வாய்ப்புள்ளது. ஜெயிலர் படத்தில் வசூல் சாதனையை முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.