Actor Sathyaraj pt desk
தமிழ்நாடு

தமிழ் தேசியம் என்ற பெயரில் திராவிடத்தை எதிர்த்து ஆரியத்திற்கு துணை போவது ஆபத்தானது - நடிகர் சத்யராஜ்

“ஆரியம் திராவிடத்தை எதிர்ப்பது ஓகே. தமிழ் தேசியம் என்கின்ற பெயரில் திராவிடத்தை எதிர்த்து ஆரியத்திற்கு துணை போவது ஆபத்தானது” என்று நடிகர் சத்யராஜ் பேசியுள்ளார்.

PT WEB

செய்தியாளர்: சுகன்யா

சென்னை இராஜா அண்ணாமலை புரத்திலுள்ள முத்தமிழ் பேரவையில், திராவிடர் இயக்க தமிழர் பேரவை சார்பில் திராவிடமே தமிழுக்கு அரண் என்ற சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடிகர் சத்யராஜ், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், தமிழ்நாடு திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

MGR

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் பேசியபோது....

“மிக முக்கியமான மேடை என்பதால் எழுதிக் கொண்டு வந்திருக்கிறேன். எனக்கு 11 வயதானபோது, அதாவது 1965ல் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தது. அந்த நேரத்தில் தமிழ் ஆர்வமோ தமிழ் உணர்வோ எனக்கு இல்லை. அது ஒரு சிறு வயது. தமிழ் வாழ்க இந்தி திணிப்பு ஒழிக என்ற போராட்டம் பெரிய அளவில் வருகிறது. அதனை பெரிய அளவில் எடுத்துச் சென்ற இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம். அதனால்தான் என்னை போன்ற ஒரு 11 வயது இளைஞனின் பார்வை அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூலம் தமிழின் பக்கம் திரும்பியது. தமிழின் பெருமை பக்கம் திரும்பியது.

பராசக்தி திரைப்படம் பார்த்தபின் கலைஞர் பேசிய தமிழின் மீது காதல் வந்தது:

சினிமாவிற்குச் சென்றால் அங்கு எம்ஜிஆரும் கூட தமிழ் பெருமையை பேசுகிறார். என்னை போல் ஒரு இளைஞனுக்கு தமிழை ஊற்றி வளர்த்தது திராவிட இயக்கம்தான். என்னுடைய குடும்பம் ஆங்கிலம் பேசும் குடும்பம் ஆங்கிலத்திற்கு மரியாதை கொடுக்கும் ஒரு குடும்பம். அப்படி இருக்கும் ஒருவனுக்கு பகுத்தறிவு சிந்தனை திராவிட இயக்க சிந்தனை கொடுத்தது திராவிட இயக்கம்தான்.

கருணாநிதி

பராசக்தி திரைப்படம் பார்த்தபின் தமிழின் மீது ஆர்வம் வந்தது. கலைஞர் பேசிய தமிழின் மீது காதல் வந்தது. பராசக்தி படத்தில் வரும் வசனத்தை கேட்டு மனப்பாடம் செய்து மற்றவர்களிடம் பேசி காட்டுவதில் ஒரு பெரிய பெருமிதம். அதை பள்ளிக் கூடத்தில் பேசுவது ஒரு கெத்துதான். அதில் ஒரு மகிழ்ச்சி கிடைக்கும். எனது சிறுவயதில் திராவிட இயக்க கலைஞர்களும் திராவிட இயக்கமும் சேர்ந்து ஒரு மிகப்பெரிய அளவில் தமிழ் ஆர்வத்தை, தமிழை நேசிக்கும் ஒரு மனதை உருவாக்கி விட்டார்கள்.

திராவிட தலைவர்கள் பிரபாகரன் மீது மரியாதை வைத்திருந்தார்கள்:

நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தது. பேரறிஞர் அண்ணா செய்த முதல் வேலை, சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டினார். இன்று சிலர் திராவிட இயக்கத்தை தாண்டி நாங்கள் தமிழ் தேசியத்தை முன்னெடுக்கிறோம் என்கிறார்கள், எடுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அதற்காக திராவிட இயக்கத்தை எதிர்வினையாக கட்டமைப்பது எனக்கு வருத்தமான விஷயம்.

1985 காலகட்டத்தில் ஈழத் தமிழர் விடுதலைப் போர் உச்சகட்டத்தில் இருக்கிறது. அந்தப் போராட்டத்தில் திராவிட இயக்க தலைவர்களும் தோழர்களும்தான் பங்கெடுக்கிறார்கள். கிட்டத்தட்ட தூக்கு தண்டனை வரை சென்றார்கள். ஈழ விடுதலைக்கு பெரிய அளவில் உத்வேகமாக இருந்தது திராவிட இயக்கங்கள்தான். பிரபாகரன் மீது திராவிட தலைவர்கள் மரியாதை வைத்திருந்தார்கள்.

தமிழ் தேசியத்தை ஆரியத்திற்கு எதிராக தான் நிறுத்த வேண்டும்:

தமிழ் தேசியத்தின் அரண், திராவிட இயக்கங்கள்தான், ஆரிய பண்பாட்டின் பாசிசத்தை தடுத்து நிறுத்தும் அரண் திராவிட இயக்கம்தான். அந்த இயக்கம் ஆட்சியில் இருக்கும் போது அந்த அரண் வெறும் கற்கோட்டையாக இல்லாமல் இரும்பு கோட்டையாக இருக்கிறது. அந்த இரும்புக் கோட்டையில் முதன்மை காவலராக முதலமைச்சர் திகழ்கிறார்

tamil

நிலம், மொழி, பண்பாடு காக்கும் படை தளபதி பக்கம் நிற்போம். அதுதான் என்னுடைய கருத்து. தமிழ் தேசியத்தை ஆரியத்திற்கு எதிராகத்தான் நிறுத்த வேண்டுமே தவிர திராவிடத்திற்கு எதிராக நிறுத்துவது எனக்கு உடன்பாடு இல்லை. அது பெரிய தப்பான விஷயம். தமிழ் மன்னர் காலத்தில் ஆரிய மேன்மை என்ற மாயைதான் தமிழுக்கு எதிராக இருந்தது. திராவிட இயக்கங்களின் வளர்ச்சிதான் அதை தடுத்து நிறுத்தியது. தற்போதும் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கிறது.

தம்பி அஜித்குமாருக்கு எனது பாராட்டுகள்:

தமிழ் தேசியம் என்கின்ற பெயரில் திராவிடத்தை எதிர்ப்பது அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் ஆரியத்திற்கு துணை போவது என்பதுதான். அதுவே எங்களின் கருத்து. அப்படி போகும்போது சாஸ்திரம் சம்பிரதாயம் சடங்கு என்ற போர்வையில் சகலவிதமான மூடநம்பிக்கைகளும் வளரும், சாதிய ஒடுக்குமுறை, பெண் அடிமைத்தனம், மதம், சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் அடக்குமுறைகள் எல்லாம் தலை தூக்கும்.

தம்பி அஜித்குமார் ஒரு பதிவை சமீபத்தில் சுற்றுலா செல்லும் போது பதிவிட்டார். அதில், ‘சம்பந்தமில்லாமல் ஒரு மனிதனைப் பார்த்து கோபம் வருவதற்கு காரணம் மதம்தான். எங்கேயோ ஒரு நாட்டிற்கு செல்கிறோம் ஒருவரை பார்க்கிறோம்... அவருக்கும் நமக்கும் எந்த ஒரு தகராறும் கிடையாது. ஆனால், அவர் இந்த மதம் என்று அறியப்பட்டால் தேவையில்லாமல் அவர் மீது ஒரு வெறுப்பு வரும்’ என்றிருந்தார். இந்த ஒரு அழகான பதிவை பதிவிட்டு இருக்கிறார். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள்.

நமக்கு இருமொழிக் கொள்கைதான் முக்கியம்:

ஆரியம் திராவிடத்தை எதிர்ப்பது ஓகே. தமிழ் தேசியம் என்கின்ற பெயரில் எதிர்த்து ஆரியத்திற்கு துணை போவது ஆபத்தானது, நமக்கு இருமொழிக் கொள்கைதான் முக்கியம். எதற்கு மும்மொழிக் கொள்கை? குழந்தைகளின் நேரம் ரொம்ப முக்கியம். திராவிடம்தான் தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பானது. திராவிடமே தமிழுக்கு அரண்.

இருமொழிக் கொள்கை

வட மாநிலத்தவர்கள் இங்கு வந்து வேலை செய்து வருகிறார்கள். பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள்தான் இங்கு வந்து வேலை செய்கிறார்கள். அவர்கள் தங்கள் நாட்டில் போய் திராவிட சித்தாந்தத்தால் தமிழகம் சிறப்பாக உள்ளது என்று சொல்ல வேண்டும். வடமாநிலத்தவர்கள் இங்கு வருகிறார்கள் என்றால் நம் மக்கள் அவர்களைவிட மேலே சென்று விட்டார்கள். அதற்காக நம் மக்கள் வேலை செய்ய வரவில்லை என்று அர்த்தம் கிடையாது” என்று பேசினார்.