சத்யராஜ், பிரதமர் மோடி, சந்திரபாபு நாயுடு, நிதிஷ் pt web
தமிழ்நாடு

“அவங்க ரெண்டு பேரிடம் சொன்னால் போதும்... நமக்கான வேலையை செய்துவிடுவார்கள்” - நடிகர் சத்யராஜ்

PT WEB

திருச்சி மாவட்ட மாநகர ஓட்டுநர் அணி சார்பாக கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா திருவெறும்பூர் அருகே உள்ள பெல் கம்யூனிட்டி ஹாலில் நேற்று நடைபெற்றது. திமுக மாவட்ட அமைப்பாளர் முகமது இலியாஸ், மாநகர அமைப்பாளர் சரவணன் சண்முகம் ஆகியோர் அதற்கு தலைமை வகித்தனர்.

இவ்விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாநில ஓட்டுநர் அணி செயலாளர் செங்குட்டுவன், நடிகர் சத்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய சத்யராஜ்,

“அமைப்பு சாரா தொழிலாளர்கள் பிரச்னைகளை போக்கும் வகையிலும், இறப்பின் போது அவர்களுக்கும் நிதி உதவி கிடைக்கும் வகையிலும் அவர்களுக்கு உரிய காப்பீட்டு பிரிமியம் தொகையை தமிழக அரசு செலுத்தும் என தமிழக முதல்வர் கூறியுள்ளதற்கு தலை வணங்குகிறேன்.

“வடமாநில தொழிலாளர்களின் தமிழக வருகை - இதுதான் காரணம்”

வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்திற்கு அதிகமாக வருகின்றனர். காரணம் அங்கு கல்வித் தரம் சரியாக இல்லை. தமிழ்நாட்டின் கல்வித்தரம் மற்ற நாடுகளின் கல்வித்தரத்தோடுதான் போட்டி போட்டுக் கொண்டு வருகிறது. அதனால்தான் இந்த மாநிலத்திற்கு வருபவர்கள் தமிழகத்திற்கு வந்தால் அமெரிக்கா, லண்டனில் வாழ்வது போல் வாழலாம் என நினைக்கின்றனர்.

அந்தளவுக்கு நம் மாநிலத்தில், கல்வியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. வடமாநிலத்தவர்களுக்கு நாம் இங்கு சுயமரியாதை, பகுத்தறிவு, பெண் விடுதலை சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் அங்கு நடக்கும் கொடுமைகள் தடுக்கப்படும்.

தமிழகத்தில் பாமர மக்கள் மத்தியில் அவற்றை கொண்டு சேர்த்தது போல் வட மாநிலத்திலும் திராவிட சித்தாந்தத்தை கொண்டு சேர்க்க வேண்டும். அப்படி செய்தால், அவர்களும் திராவிட மாடல் ஆட்சிக்கு வந்து விடுவார்கள். பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற எண்ணம் வராது. தமிழகத்தின் வளர்ச்சி அவர்களுக்கு புரியும். நாம் ஏன் 40-க்கும் 40 பெற்றோம் என்பதும் தெரியும்.

நார்வே கல்வித்தரமும் நாத்திகமும்!

நார்வேயில் நாத்திகம் அதிகம்; அதனால்தான் அவர்கள் சுகமாக உள்ளனர். நார்வே கல்வித்தரத்தை அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

‘திருச்சியும் நானும்...’

நான் 225 படங்கள் நடித்துள்ளேன்; இதில் அமைதிப்படையும் வால்டர் வெற்றிவேலும் 200 நாட்கள் ஓடியது. இதில் அமைதிப்படைக்கு விழா கொண்டாடவில்லை. வால்டர் வெற்றிவேல் வெற்றிவிழா திருச்சியில்தான் நடந்தது. அதேபோல் தந்தை பெரியார் படம் திருச்சியில் எடுக்கப்பட்டது.

“சந்திரபாபு நாயுடுவும், நிதீஷும் இருக்கின்றனரே நமக்கு...”

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஏனென்றால், இன்றைக்கு இருக்கும் ஆட்சி நிலையில், அப்படி ஒரு நிலைக்கு மத்திய அரசு வந்துவிடும்.

ஆட்சியில் இருக்கிறோமோ இல்லையோ... அங்கு யார் பிரதமராக இருந்தாலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி சொல்வதை கேட்டுத்தான் ஆக வேண்டும். அவர்கள் கேட்கவில்லை என்றாலும் சந்திரபாபு நாயுடு, நிதீஷ் எல்லாம் இருக்கிறார்களே.. அவர்கள் ரெண்டு பேரிடமும் சொன்னாலே நமக்கான வேலையை அவர்கள் செய்துவிடுவார்கள்.

“உ.பி-யில் திராவிடம் பற்றியும் சித்தாந்தம் பற்றியும் எடுத்து கூற வேண்டும்”

தேர்தலில் உ.பி-யில் பாதிக்கு பாதிதான் பாஜக பெற்றார்கள். திராவிடம் தெரிந்து இருந்தால் முழுமையும் பெற்று வந்திருக்கலாம். கோவையில்கூட, வட மாநிலத்தவர் அதிகமாக உள்ளனர். அவர்களுக்கு திராவிடம் பற்றியும் சித்தாந்தம் பற்றியும் எடுத்து கூறுவதற்கு ஆட்களை நியமிக்க வேண்டும்; அதற்கு நான் உதவ தயார்.

வடநாட்டுக்காரர்களுக்கு, இந்த சத்யராஜை தெரியாது. ஆனால் கட்டப்பாவை தெரியும். அசாம், பெங்கால், பீகார் உள்ளிட்ட வட மாநிலத்திற்கு திராவிட மாடலை கொண்டு செல்ல வேண்டிய கருவியாக நான் இருப்பேன்.

‘கலைஞரும் நானும்’

கலைஞரிடம் தோழமையாக பழகியவன் நான். கலைஞர் 14வது வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார். ஏனென்றால் அவர் பெரியார், அண்ணா போன்றோர் கொள்கைகள் ஈர்க்கப்பட்டார். அதுதான் அவரை போராட்டத்தில் ஈடுபட வைத்தது” என்றார்.