பாஜகவுடன் தன்னை தொடர்புபடுத்தி வெளியாகும் செய்திகளால் தன் மீது பாஜக ஆதரவாளர் என்ற முத்திரை குத்தப்படுவதாக மன்ற நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் வேதனை தெரிவித்ததாக தெரிகிறது.
கடந்த 2017ம் ஆண்டு தன்னுடைய அரசியல் வருகையை உறுதி செய்த நடிகர் ரஜினிகாந்த், ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றங்களாக மாற்றினார். அதற்கு பின் கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. மக்களவைத்தேர்தல் நேரத்தில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகும் என ரஜினி ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் தன்னுடைய இலக்கு சட்டப்பேரவை தேர்தல் தான் எனக்கூறி அரசியல் பிரவேசத்தை தள்ளி வைத்தார் ரஜினிகாந்த்.ஆனாலும் அவ்வப்போது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து புதிய கட்சி வியூகம் குறித்தும், நிகழ்கால அரசியல் குறித்தும் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
(கோப்புப்படம்)
இந்த நிலையில் தர்பார் படப்பிடிப்பு முடிந்து ஓய்வில் இருக்கும் ரஜினிகாந்த், தனது வீட்டில் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. அதில் பல முக்கிய விஷயங்கள் பேசப்பட்டதாக, மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர் என்றும் அது தொடர்பான சிலர் தகவல்களையும் ’இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், தமிழகம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது மக்கள் மன்றத்தின் பணிகள் குறித்து ரஜினிகாந்த் கேட்டறிந்தார். அடுத்த ஆண்டு இயக்கம் சார்பில் மாநாடு நடத்துவதற்கான பணிகள் குறித்து ஆலோசித்தார். அதற்கான இடம் குறித்தும் ஆலோசனை நடத்தினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாஜகவுடன் தன்னை தொடர்புபடுத்தி வெளியாகும் செய்திகளால் தன் மீது பாஜக ஆதரவாளர் என்ற முத்திரை குத்தப்படுவதாகவும் ஆன்மிகப்பாதையில் பயணிப்பேன் என்பதால் சிறுபான்மையினரிடம் இருந்து தன்னை விலக்கி வைக்க சிலர் முயற்சிப்பதாகவும் ரஜினிகாந்த் வேதனை தெரிவித்ததாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மன்ற நிர்வாகிகளிடம் பேசிய ரஜினிகாந்த், தனிக்கட்சி தொடங்கும் முடிவில் இருந்து தான் பின்வாங்கப்போவதில்லை என தெரிவித்ததாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.