அத்திவரதர் தரிசன வைபவம் இன்று 45-வது நாளை எட்டியுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வழிபாடு நடத்தினார்.
காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலுக்கு நள்ளிரவு பன்னிரண்டரை மணியளவில் ரஜினிகாந்த் தன் மனைவி லதா மற்றும் குடும்பத்தினருடன் வருகை புரிந்தார். அத்திவரதர் முன்பு ரஜினியும் குடும்பத்தினரும் சில நிமிடங்கள் அமர்ந்து வழிபட்டனர். அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் ரஜினிக்கு மரியாதை செய்யப்பட்டது. ரஜினிகாந்த் வருகையை ஒட்டி நள்ளிரவு நேரத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தரிசனத்திற்கு வந்த போதும் வெளியே சென்றபோதும் ஏராளமானோர் ரஜினிகாந்த்தை பார்த்து உற்சாகமாக கையசைத்தனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. சயனகோலத்தைத் தொடர்ந்து, நின்ற திருக்கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். அத்திவரதர் வைபவம் வரும் 16-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், 17-ஆம் தேதி மீண்டும் அத்திவரதர் குளத்திற்குள் வைக்கப்பட உள்ளார்.