சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று சந்தித்துள்ளார். இரவு 8 மணி அளவில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சுமார் ஒரு மணி நேரம் நீண்ட இந்த சந்திப்பில் இருவரும் தற்கால அரசியல் சூழல் குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்த நிலையில், சீமான் அவருக்கு நேரெதிரான நிலை எடுத்து அவரை கடுமையாக விமர்சனம் செய்தார். தமிழர் அல்லாதவர் தமிழக அரசியலில் ஆட்சிக்கட்டிலுக்கு வரக்கூடாது என கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்தான், கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப்பின் நடிகர் ரஜினிகாந்த நேரடியாக சீமான் சந்தித்துள்ளார். கடந்த நவம்பர் 2 ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிறந்தநாளுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக சென்று வாழ்த்து தெரிவிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், பல்வேறு காரணங்களால் இருவரும் சந்திக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில்தான் சீமான் நேரடியாக சென்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் குறித்தும், புதிதாக கட்சி தொடங்கியுள்ள கட்சி, முதல் மாநாடு என பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.