மன்சூர் அலிகான், த்ரிஷா ட்விட்டர்
தமிழ்நாடு

”சகோதரி த்ரிஷா” ”நடிகைகளை போகிறபோக்கில் கீழ்த்தரமாகப் பேசியது மனதை நோகச் செய்கிறது"-மன்சூர் அலிகான்!

த்ரிஷா குறித்த கருத்துக்கு ஏ.வி.ராஜு, ஊடகம் ஒன்றிற்கு விளக்கம் அளித்துள்ளார்.

Prakash J

அதிமுகவில் சேலம் மேற்கு ஒன்றியச் செயலாளராக இருந்தவர் ஏ.வி.ராஜு. இவர் சமீபத்தில் கலந்துகொண்ட பத்திரிகையளர்கள் சந்திப்பில், நடிகை த்ரிஷாவைத் தொடர்படுத்தி மிகவும் மோசமான சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியிருந்தார். அதிமுக தரப்பில் பலரையும் வம்பிற்கு இழுத்து பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் சேரன், “எந்த ஆதாரமும் இன்றி திரைத்துறையினர் மீது அவதூறு பரப்பும் சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

நடிகை காயத்ரி ரகுராம், “நடிகர்களை தரக்குறைவாக பேசிய இவர் மீது நடிகர் சங்கம் நிச்சயம் வழக்கு தொடர வேண்டும். அதேபோல ராஜு இந்த மனநிலையுடன் சென்று பாஜகவில் இணைந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். அத்தகையவர்களை அவர்கள் வரவேற்பார்கள். NCW இதைக் கண்டு அமைதியாக இருக்கிறது, குஷ்பமும் இதுவரை எதுவும் பேசவில்லை. ஒரு நடிகையாக நான் வருத்தப்படுகிறேன். இதுபோன்ற மோசமான கருத்துக்களை எதிர்கொள்ளும் எந்த நடிகைக்கும் நான் துணை நிற்பேன்" என்று அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

சகோதரி த்ரிஷா... கேவலமான, அருவருக்கத்தக்க வகையில் திரைத்துறை சகோதரிகளை, அரசியல்வாதி என்ற பெயரில் ஒருவர் பேசியுள்ளார். நடிகைகளைப் போகிறபோக்கில் கீழ்த்தரமாகப் பேசியது மனதை நோகச் செய்கிறது. அவதூறாகப் பேசியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நடிகர் மன்சூர் அலிகானும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதேபோல், தொழிலாளர் அமைப்பான ஃபெப்சியும் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில், ஏ.வி.ராஜுவின் கருத்துக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தம்முடைய எக்ஸ் தளத்தில், ’கவனத்தை ஈர்ப்பதற்காக எந்தநிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மற்றும் கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பானது. தேவையான, கடுமையான நடவடிக்கை சட்டப்படி எடுக்கப்படும் என்பதை உறுதி செய்கிறேன். இதற்குமேல் மற்றவற்றை என்னுடைய வழக்கறிஞர் குழு பார்த்துக் கொள்வார்கள்’ என அதில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே நடிகை குஷ்புவும் இதுகுறித்து தமது பதிவை எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் த்ரிஷா குறித்த கருத்துக்கு ஏ.வி.ராஜுஅளித்துள்ள விளக்கத்தில், ”அன்று நடந்தது என்னவென்பதைச் சரியாகச் சொல்ல வேண்டுமானா, நான் கூவத்தூருக்குப் போயிருந்தேன். இந்த மாதிரி, த்ரிஷா சப்செக்ட்டை நான் பேசலை. இதைத் திரித்துப் போட்டுக் கொண்டிருக்கிறாங்க. இதில் தவறா சித்தரிப்பது எந்த இடத்திலும் இல்ல.

இதுக்கும் அதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல. தயவுகூர்ந்து இதை நீங்க கவனத்துல வச்சிக்கிட்டு பரிசீலிக்கணும். அந்த வார்த்தைய பேசுவிடுற அளவுக்கு நான் தகுதியானவன் இல்ல. நான் சொன்ன வார்த்தைகள் யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.