நடிகர் கருணாஸ் PT WEB
தமிழ்நாடு

"என் மீதும், திரிஷா மீதும் அவதூறு பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - கருணாஸ் புகார்!

"என் மீதும், நடிகை திரிஷா குறித்தும் அவதூறு பரப்பிய நபர்" மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடிகர் கருணாஸ் இன்று காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

விமல் ராஜ்

புகாரும்.. நீக்கமும்!

அதிமுக சேலம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த ஏ.வி.ராஜூ, சேலம் மாநகர் மாவட்டச் செயலாளரான வெங்கடாசலம் மீது மோசடி புகாரை முன் வைத்து இருந்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த அவர், "சேலம் மாநகர் மாவட்டச் செயலாளரான வெங்கடாசலம் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாகவும், அதிகளவில் சொத்துகளை வாங்கி குவித்ததாகவும் கூறியுள்ளார்.மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவரால் சேலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் உள்ளனர், அதில் நான் தான் முதலில் வெளியில் கூறியுள்ளேன். இனிமேல் தான் ஒவ்வொருவராக வெளிவருவார்கள்” என தெரிவித்து இருந்தார்.

இச்சம்பவம் அதிமுகவினருடைய பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் “கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.வி.ராஜூ இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து ஏ.வி.ராஜூ, எடப்பாடி பழனிசாமி மீது தொடர்ந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துப் பேசி வந்தார்.

கூவத்தூரில் நடந்தது குறித்து சர்ச்சையாக பேசிய ஏ.வி.ராஜூ!

குறிப்பாகக் கூவத்தூரில் நடந்த சம்பவங்கள் குறித்து பகிரங்கமாகப் பேசியுள்ள அவர், நடிகை திரிஷா குறித்தும் நடிகர் கருணாஸ் குறித்தும் பேசியுள்ள சம்பவம் சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏ.வி.ராஜூ

இந்த சம்பவத்திற்கு சினிமா பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "ஏ.வி ராஜு பெரிய ஆள் கிடையாது. அவர் பேசியதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஏதோ இரக்கப்பட்டு கட்சியில் சேர்த்தோம். அவர் ஏற்கனவே வேறு விதமான மனநிலையில் இருந்தார். அவர் உடல்நிலை சரியில்லாதவர் என்பதால், இரக்கப்பட்டோம். இப்போது கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதால் கட்சி சார்பில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

எடப்பாடி பழனிசாமி

இந்த சம்பவம் தொடர்பாக, நடிகை திரிஷா தனது, எக்ஸ் பக்கத்தில்,"கவனத்தை ஈர்ப்பதற்காக எந்தநிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மற்றும் கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பானது. தேவையான, கடுமையான நடவடிக்கை சட்டப்படி எடுக்கப்படும் என்பதை உறுதி செய்கிறேன். இதற்குமேல் மற்றவற்றை என்னுடைய வழக்கறிஞர் குழு பார்த்துக் கொள்வார்கள்’ என அதில் தெரிவித்து இருந்தார்.

இயக்குநர் சேரன்

இந்த சூழலில் தமிழ் நடிகை குறித்து அவதூறு பரப்பும் சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ. வி. ராஜு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயக்குநர் சேரன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில், "எந்த ஆதாரமும் இன்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றிப் பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவர் மீது சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நடிகர் சங்கம் இதற்குத் தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன்" எனப் பதிவிட்டு இருந்தார்.

நடிகை திரிஷா

இந்தநிலையில், இன்று இது தொடர்பாக, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் கருணாஸ் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், "என்மீதும் நடிகை திரிஷா மீதும் அவதூறு பரப்பிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவதூறு பேசிய வீடியோவானது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது அதனை உடனடியாக நீக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.