தமிழ்நாடு

ரியல் தீரனுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி

ரியல் தீரனுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி

webteam

வீரமரணமடைந்த காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் வீட்டுக்கு நேரில் சென்ற நடிகர் கார்த்தி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியின் போது, மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவருடைய உடல் நேற்று காலை சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அரசு சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்து பெரியபாண்டியனின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர்.

 சென்னையில் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர், அவரது உடல் விமானம் மூலம் மதுரை கொண்டு செல்லப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இறுதி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பெரியபாண்டியனின் உடல் அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் மூவிருந்தாளி சாலைப்புதூருக்கு கொண்டு செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

வீரமரணமடைந்த நிஜ தீரனான காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் வீட்டில், திரைப்படத்தில் தீரனாக நடித்த நடிகர் கார்த்தி, நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.  அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய கார்த்தி, பெரியபாண்டியன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.