ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய நடிகர் கமல்ஹாசன் 20 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உலகின் செம்மொழிகளான 7 மொழிகளில் தமிழை தவிர மற்ற 6 செம்மொழிகளுக்கும் இருக்கைகள் உள்ளன. ஆனால் மூத்த மொழியான தமிழுக்கு அந்த இருக்கை இதுவரை அமையப் பெறவில்லை. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தென்கிழக்கு ஆசிய கல்வித்துறையின் ஓர் அங்கமாக சங்கத்தமிழ் இருக்கை ஒன்றினை நிறுவுவதற்கான முயற்சியில் பல்வேறு தமிழ் ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழ் இருக்கைக்கான அனுமதி பெறுவதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.40 கோடி தேவை. தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் இதற்காக நிதி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய நடிகர் கமல்ஹாசன் 20 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் குழுவிடம் 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கமல்ஹாசன் வழங்கினார். அப்போது பேராசியர் கு.ஞானசம்பந்தன், லண்டனைச் சேர்ந்த முனைவர் ஆறுமுகம் முருகையா, அமெரிக்காவைச் சேர்ந்த கார்டுவெல் வேல்நம்பி, எழுத்தாளர் சுகா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை நிதிக்காக கமல்ஹாசன் ஓராண்டுக்கு முன்பே குரல் கொடுத்ததாகவும், தற்போது நிதி அளித்திருப்பதாகவும் பேராசியர் கு.ஞானசம்பந்தன் பேசினார். மேலும், ஊர் கூடித் தேர் இழுப்போம், தமிழ் இருக்கைக்கு பொருள் கொடுப்போம் என்பது கமலின் கருத்து என்றும் கு.ஞானசம்பந்தன் கூறினார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய தமிழக அரசு ஏற்கனவே 10 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது.