இளவரசு pt web
தமிழ்நாடு

Remembering Vijayakanth | “விஜயகாந்த் இத்தனை கஷ்டப்பட்டிருக்க வேண்டாம்” - இளவரசு வேதனை பதிவு

Angeshwar G

சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து விஜயகாந்திற்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது.

அவரது உடல் சாலிகிராமத்தில் இருந்து கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு வருகிறது.

அரசியல் தலைவர்கள், திரையுலகினர் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பலர் இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியிடம் நடிகர் இளவரசு, விஜயகாந்த் உடனான தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். இளவரசு நம்மிடையே கூறியதாவது, “திரையுலத்திற்கு வருவதற்கு முன்பே மதுரையில், ரஜினிகாந்தின் திரைப்படங்களுக்கான வழக்கமான விநியோகஸ்தர் ஒருவரது அலுவலகத்தில் வைத்துதான் விஜயகாந்த்தை நான் சந்தித்தேன். இப்ராஹிம் ராவுத்தரும் உடன் இருந்தார். சினிமாவிற்கு வருவதற்கு முன்பே மதுரைக்காரர் என்பதன் அடிப்படையில் தினமும் விஜயகாந்த்தை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

விஜயகாந்த் எந்த ஒரு விஷயத்திலும் ஏனோதானோ என இருக்க மாட்டார். அவரை நம்பி வருபவர்களுக்கு எந்த அளவிற்கு நியாயம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்வார். உதவி செய்ய வேண்டும் என முடிவெடுத்துவிட்டால் அதனால் வரும் பின் விளைவுகளைப் பற்று யோசிக்க மாட்டார். என்ன நடந்தாலும் அதை செய்யலாம் என்ற மனநிலை கொண்டவர்.

சினிமாவில் அவர் கதாநாயகராக நடிக்கும் போது பல போராட்டங்களை சந்தித்தார். பலர் அவருடன் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் சொன்னார்கள். ஒரு நடிகர் ஒரு கட்சித் தலைவர் இறந்துவிட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பது மரபு. ஆனால் அதைத்தாண்டி வாழ்க்கையில் சமூகத்தில் வளரும் பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டிய செய்தி, அவமானங்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் அதை எதிர்த்து போராடி வர முடியுமென்றால் அதற்கு விஜயகாந்த் ஒரு உதாரணம். விஜயகாந்தின் தனிப்பட்ட பண்பாக இதையெல்லாம் சொல்ல வேண்டும்.

விஜயகாந்த் மறைவு
இத்தனை கஷ்டப்பட்டு இந்த மரணத்தை அவர் சந்தித்திருக்க வேண்டிய தேவை இல்லை. இன்னும் கொஞ்சம் முன்னாடியே மரணம் நிகழ்ந்திருக்கலாம். அவரது மரணத்திற்கு நாம் அஞ்சலி செலுத்துகிறோம் என்பதெல்லாம் வேறு. ஆனால் அவர் இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க வேண்டாம்.
- இளவரசு

நடிகராக, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும் 1980களில் எப்படி பேசினாரோ அப்படித்தான் பேசுவார். அது அவரது பக்குவம். வழக்கமாக மதுரையில் 40 வருடங்களுக்கு முன் எப்படி பழகினாரோ அப்படித்தான் எல்லோருடனும் எப்போதும் பேசுவார்” என தெரிவித்தார்.