தமிழ்நாடு

அதிகரிக்கும் குடிநீர் தேவை: ஆழ்துளை கிணறுகளை நாடும் சென்னை குடிநீர் வாரியம்

அதிகரிக்கும் குடிநீர் தேவை: ஆழ்துளை கிணறுகளை நாடும் சென்னை குடிநீர் வாரியம்

webteam

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள் வறண்டு விட்ட நிலையில், பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து நீர் கொண்டு வரும் பணிகளை சென்னை குடிநீர் வாரியம் தொடங்கியுள்ளது.

சென்னையை சுற்றியுள்ள முக்கிய ஏரிகளான செம்பரம்‌பாக்கம், புழல், சோழவரம் ஆகிய ஏரிகள் வறண்டு காணப்படுகின்றன. பூண்டி ஏரியில் மட்டும் தற்போது 48 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. சென்னையின் ஒருநாள் குடிநீர் தேவை 1200 மில்லியன் லிட்டராக உள்ள நிலையில், குடிநீர் பிரச்னையை தீர்க்க சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையைச் சுற்றியுள்ள கல்குவாரிகளில் இருந்து நீர் எடுக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு சென்னை மக்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது குவாரிகளிலும் நீர் குறைந்துவருவதால் மாற்று பணிகளை சென்னை குடிநீர் வாரியம் தொடங்கியுள்ளது.

அதன்படி பூண்டியை சுற்றியுள்ள மோ‌வூர், சிறுகாவனூர், காந்திநகர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளின் கிணறுகளிலிருந்து தண்ணீரை பெற்று சென்னைக்கு அனுப்பி வைக்கும் பணியை சென்னை குடிநீர் வாரியம் தொடங்கியுள்ளது. அதேபோல,‌ காந்திநகரில் 16 ஆழ்துளை மோட்டார்கள் என மொத்தம் பூண்டியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 180 விவசாயிகளிடம் இருந்து நாளொன்றுக்கு 18 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெறப்பட்டு சென்னைக்கு விநியோகிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

சென்னை மக்களுக்கு தினசரி 1200 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக தினசரி 525 மில்லியன் லிட்டர் குடிநீர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.