சமூக செயற்பாட்டாளரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளருமான முகிலன் மாயமானது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று கொண்டு வரப்பட்ட ஆட்கொணர்வு மனு மீது மதியம் விசாரணை நடக்கிறது.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த இவர், கடந்த 15 ஆம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறையில் பொதுமக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. போலீஸ் உயர் அதிகாரிகள்தான் வன்முறைக்கு காரணம் என்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டார். இந்த ஆதாரங்களை வெளியிடுவதால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் முகிலன் கூறினார்.
பத்திரிகையாளர் சந்திப்புக்கு பின் எழும்பூரில் இருந்து மதுரைக்கு ரயில் சென்றுள்ளார். இரவு 10.30 மணிக்கு நண்பர்களுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அதன் பிறகு அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. இதையடுத்து எழும்பூர் ரயில்வே போலீசில், தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பு சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
முகிலன் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் ஸ்டெர்லைட்டுக்கு சம்பந்தப்பட்டவர்கள் அல்லது போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து துன் புறுத்தலாம் என்று சந்தேகிப்பதாகவும் அவரைக் கண்டுபிடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் கூறப் பட்டுள்ளது.
இந்நிலையில், முகிலன் மாயமானது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து இந்த வழக்கை உயர்நீதிமன்றம் இன்று மதியம் விசாரிக்கிறது.