தமிழ்நாடு

தென்மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த நடவடிக்கை: தங்கம் தென்னரசு

தென்மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த நடவடிக்கை: தங்கம் தென்னரசு

Veeramani

நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தை முன்னிலைப்படுத்தி நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கான கலந்தாய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியர் வளாக அரங்கில் நடைபெற்றதுஇதில் சபாநாயகர் அப்பாவு, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர்சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் சிப்காட் மற்றும் எல்காட் பகுதிகளில் தொழிற்சாலைகளை நடத்தி வருபவர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடத்தினர்.

இந்தக் கூட்டம் முடிந்ததும் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தை முன்னிலைப்படுத்தி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். புதிய தொழில் தொடங்குவதற்காக அமைக்கப்பட்ட ஒற்றைச் சாளர முறை இதுவரை  இருந்தது. இனிமேல் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக தொழில் முதலீட்டாளர் மாநாட்டை தென்மாவட்டங்களில் நடத்த முதல்வரோடு ஆலோசனை நடத்தி ஏற்பாடு செய்யப்படும்.

2020-21 ஆண்டு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம் சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசியை தமிழகமே தயாரிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் எண்ணம். செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி தயாரிப்பதற்கான அனுமதியை வழங்கவேண்டியது மத்திய அரசின் கையில் உள்ளது.

தமிழக முதல்வர் பிரதமரை நேரில் சென்று தடுப்பூசி உற்பத்தி ஆலை தொடர்பாக வலியுறுத்தி உள்ளார். அரசு சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை அப்படியே உள்ளது. தடுப்பூசி தயாரிப்பு செய்வது தொடர்பாக மத்திய அரசின் முடிவை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் ஆலையை பொருத்தவரை ஆக்சிசன் உற்பத்திக்கு மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ளது. ஆலையிலும் ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் முதல் கூட்டுறவு நூற்பாலையான நெல்லை பேட்டையில் உள்ள கூட்டுறவு நூற்பாலை கூட்டுறவு சங்கத்தின் கையில் உள்ளது. விரைவில் அங்கு ஆய்வு செய்து மாற்று தொழில் ஏற்பாடுகள் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்என தெரிவித்தார்.