ஒரு லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறும் ஹெச்.ராஜா அதற்கான ஆவணங்களை கொடுத்தால், அதனை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சிவகங்கையில் நேற்று கௌரி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 10 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டதை பார்வையிட வந்த அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார்.
இது தொடர்பாக பேசிய அமைச்சர் சேகர்பாபு, “ கோயில்களுடைய சொத்துக்களை யார் அபகரித்து இருந்தாலும் அதனை உடனடியாக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் , திருக்கோயில்களுடைய சொத்துக்களை யார் அபகரித்தாலும் ஆண்டவன் கொடுக்கும் உரிய தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். கோயில் இடத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர், கண்காணிப்பாளர் உறுதி அளித்துள்ளார்கள்” என்று கூறினார்.
மேலும், “அரசினுடைய பதிவேடுகளில் பல்வேறு திருத்தங்கள் செய்து கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களை குறை சொல்லாமல் ஆன்மீக சொத்துக்களை பாதுகாக்க எங்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கோயில் சொத்துக்களை அபகரித்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் எச்சரித்தார்.