தமிழ்நாடு

மேட்டுப்பாளையம்: மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகள் மீது ஆசிட் வீசிய மர்ம நபர்கள்

மேட்டுப்பாளையம்: மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகள் மீது ஆசிட் வீசிய மர்ம நபர்கள்

webteam

மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகள் மீது ஆசிட் வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள கல்லார் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (39). விவசாயியான இவர், 10 ஏக்கர் விவசாய விளைநிலத்தை குத்தகைக்கு எடுத்து பாக்கு மற்றும் வாழைகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருவதோடு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் வளர்த்து வருகிறார்.

நாள்தோறும் காலையில் கால்நடைகளை மேய்ச்சலுக்காக அருகே உள்ள மலையடிவார பகுதிக்கு அழைத்துச் சென்று மாலை நேரத்தில் திரும்பவும் ஓட்டி வந்து தனது தோட்டத்தில் கட்டிச் செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மேய்ச்சலுக்குச் சென்ற கால்நடைகள் மீது ஆசிட்டை ஊற்றியதாக தெரிகிறது.

இதையடுத்து அதிர்ச்சியடைந்த விவசாயி ராஜ்குமார், திராவகம் வீசியதால் ஏற்பட்ட எரிச்சலால் அவதிப்பட்ட 4 பசு மாடுகள் மற்றும் 40 எருமை மாடுகளை கால்நடை மருத்துவரிடம் சிகிச்சைக்காக கொண்டு சென்றார். தனது கால்நடைகள் மீது அமிலம் வீசப்பட்டதை உறுதி செய்து கொண்ட ராஜ்குமார் இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையம் மற்றும் வனத்துறை அலுவலகத்திலும் புகார் அளித்தார். தற்போது கால்நடை மருத்துவ குழுவினர் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கால்நடைகளின் மீது ஆசிட் வீசிய கொடூர சம்பவம் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.