செய்தியாளர்: மணிகண்டபிரபு
கோவில்பட்டி விளாத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் சோபனா (28) இவருக்கு திருமணமாகி 8 மாதம் கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் உடல்நலக் குறைவு ஏற்பட்டு கை மற்றும் கால்கள் முற்றிலும் செயலிழந்துள்ள. இதனையடுத்து கோவில்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு சோபனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சோபனாவிற்கு நரம்பு மண்டல சிறப்பு பரிசோதனை செய்தனர். அப்போது ஜிபிஎஸ் எனும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியே நரம்பு மண்டலத்தை பாதிக்கும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து கர்ப்பிணியாக சோபனாவுக்கு அறுவை சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இம்யூனோகுளோபலின் மருந்து கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து செப்டம்பர் மாதம் சோபனாவிற்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.
இதனையடுத்து 8 நாட்கள் கழித்து மீண்டும் சோபனாவிற்கு கை, கால்கள் செயலிழந்த நிலையில் மீண்டும் நரம்பு மண்டல பரிசோதனை செய்யப்பட்டு உலகில் 8 சதவீதம் பேருக்கு மட்டுமே இருக்கும் நோடோபதி எனும் அரியவகை நோய்த் தாக்கம் இருந்தது கண்டறியப்பட்டது.
இந்நிலையில் சோபனாவின் நிலையை மருத்துவத்துறை கவனத்திற்கு கொண்டு சென்று 15 லட்ச ரூபாய் மதிப்பிலான ரிட்டுக்ஸிமாப் எனும் மருந்து அரசின் கலைஞர் காப்பீடு திட்டத்தால் பெறப்பட்டு சோபனாவிற்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் சோபனா நலமுடன் மீண்டுள்ளார்.
கர்ப்பிணியாக இருந்த சோபனா கை கால்கள் செயலிழந்து உயிருக்கு ஆபத்தான அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை அரசு இராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள மருந்து மற்றும் சிகிச்சை மூலம் முற்றிலும் இலவசமாக கலைஞர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பாற்றி உள்ளனர். தன்னை சிறப்பாக கவனித்து குணப்படுத்திய மருத்துவர்களுக்கு சோபனா நன்றி தெரிவித்துக் கொண்டார்.