தமிழ்நாடு

‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்

‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்

சங்கீதா

ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து சென்னை குடிநீருக்காக திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர், 20 நாட்களில் 1 டிஎம்சி தண்ணீர் வந்தடைந்துள்ளது. இன்னும் 5 டிஎம்சி தண்ணீர் வர உள்ளதால் கோடையை சமாளித்து சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் நீர்வள ஆதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து கடந்த 5-ஆம் தேதி சென்னை குடிநீருக்காக 500 கன அடி கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டது. படிப்படியாக 1500 கன அடியாக அதிகரிக்கப்பட்டு, 8-ம் தேதி தமிழக எல்லையான ஜீரோ பாயிண்ட்டை வந்தடைந்து, பூண்டி நீர்த்தேக்கத்தில் சேமிக்கப்பட்டு வருகிறது. சென்னை குடிநீருக்காக ஆண்டுக்கு 2 தவணைகளாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரும் வழங்க ஆந்திர தமிழக அரசுகளிடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, வழங்கப்பட வேண்டும்.

இந்நிலையில், சென்னை குடிநீருக்காக நீர் திறக்க தமிழக பொதுப்பணித்துறையினரய் நீர்வள ஆதாரத்துறையினர், இந்தப் பருவத்தில் 6 டிஎம்சி தண்ணீர் திறக்க ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர். இதனைத் தொடர்ந்து ஆந்திர அரசும் கடந்த மாதம் 5-ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடியாக திறந்த கிருஷ்ணா நதி நீரை, 1500 கன அடியாக உயர்த்தியது. தமிழக எல்லையான ஜீரோ பாயிண்ட்டில் வந்த கிருஷ்ணா நதி நீர் பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்தில் சேமிக்கப்படுகிறது.

கடந்த 20 நாட்களில் மட்டும் சென்னை குடிநீருக்காக 1.23 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது. மீதமுள்ள 5 டிஎம்சி தண்ணீரும் வர உள்ளதால் கோடையை சமாளிக்கலாம் எனவும், இதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.