காவேரி ஆறு புதியதலைமுறை
தமிழ்நாடு

தஞ்சாவூர்| 2.5 ஆண்டுகளில் 99 பேர் பலி! நீர் நிலைகளில் தொடரும் உயிரிழப்புகள்.. தடுக்கும் வழிகள் என்ன?

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் காவிரி கிளை ஆறுகள் இருப்பதால், மேட்டூரில் தண்ணீர் திறக்கும் போது வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம்.

PT WEB

தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் ஆற்றில் மூழ்கி 99 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதற்கான காரணம் என்ன? தடுக்கும் வழிகள் என்ன? என்பதை இந்த பார்க்கலாம்.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் காவிரி கிளை ஆறுகள் இருப்பதால், மேட்டூரில் தண்ணீர் திறக்கும் போது வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். அச்சமயத்தில் நீர்நிலைகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

இருப்பினும் எச்சரிக்கைகளை பொருட்படுத்தாமல் கல்லூரி, பள்ளி மாணவர்கள் ஆறுகளில் குளிக்க செல்வதால் வெள்ளத்தில் சிக்கியும், நீச்சல் தெரியாமல் ஆர்வத்தில் ஆறுகளில் இறங்குவதாலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இது சமீப காலமாக உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 99 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக 2022 ஆம் ஆண்டு மட்டும் 54 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு 29 பேரும், நடப்பாண்டில்தற்போது வரை 16 பேரும் மரணமடைந்துள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கிறது. இதில் அதிகளவு இளம் வயதினர் என்பது வருத்தம் தரும் செய்தியாக உள்ளது.

இந்த இரண்டரை ஆண்டு காலக்கட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய 21 பேரை தஞ்சை மாவட்ட தீயணைப்புத்துறை உயிருடன் மீட்டுள்ளனர். இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க அனைவரும் உறுதுணையாக செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள மாவட்ட ஆட்சியர், மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

நீர்நிலைகள் அருகில் ஆபத்தான முறையில் செல்ஃபி எடுப்பது, ரீல்ஸ் எடுப்பது, நீச்சல் தெரியாமல் ஆற்றில் இறங்குவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. நீர்நிலைகளின் தன்மை அறிந்து மாவட்ட நிர்வாகம் அறிவறுத்தும் வழிமுறைகளை பின்பற்றினால் வரும் காலங்களில் உயிரிழப்புகளை தடுக்க முடியும்.