இருசக்கர வாகன விபத்து புதிய தலைமுறை
தமிழ்நாடு

ஒரே இடம்.. இரண்டு நாள் இரண்டு விபத்து.. மாறி மாறி மோதிக்கொள்ளும் பைக்குகள்.. காரணம் என்ன?

மதுரை மாவட்டம் மேலூர் மெயின் ரோட்டில் ஒரே இடத்தில் தொடர்ந்து விபத்துகள் நடப்பது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

யுவபுருஷ்

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் மேலூர் மெயின் ரோடு பகுதியானது எப்போதும் வாகன ஓட்டிகள் அதிகம் பயணிக்கும், கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படும் பகுதியாக இருக்கிறது. இந்த சாலையில், ஜம் ஜம் சுவீட்ஸ் கடை எதிரே இருபுறமும் சாலையை கடந்து செல்லும் வகையில் டிவைடரில் இடைவெளி ஒன்று இருக்கிறது. இதில் வலது பக்கம் இருந்து இடது பக்கமும், இடது பக்கம் இருந்து வலது பக்கம் என 4 பக்கங்களில் இருந்தும் வாகன ஓட்டிகள் கடந்து செல்வது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், வேகத்தடை ஏதும் இல்லாததாலும், சாலையின் டிவைடர் இடைவெளி பகுதியில், காரோ அல்லது பைக்கோ நிற்பதற்கு போதுமான இடம் இல்லாததாலும் விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன.

குறிப்பாக, கடந்த 11ம் தேதி அன்று தனது மகளுடன் தந்தை ஒருவர் சாலையை கடக்க முயன்றபோது, சாலையில் நேராக பைக்கில் வந்தவர் மோதியதில் மூவரும் காயமடைந்தனர். அதேபோல், இன்றைய தினம் சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது, மிதமான வேகத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு இளைஞர் மோதியதில், இருவரும் காயமடைந்தனர். ஒரே இடத்தில் அடுத்தடுத்த நாட்களில் விபத்து நடந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதால், காயத்தோடு முடிந்தது. இதுவே பேருந்தோ அல்லது லாரியோ என்றால் உயிர்சேதத்திற்கும் வாய்ப்புண்டு என்று கூறும் அப்பகுதி மக்கள், விபத்து நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த இடத்தில் வேகத்தடைகளோ அல்லது சிக்னலோ அமைத்து கண்காணித்தால் விபத்துகள் நடக்காது என்பதால், அதனை அமைத்துத்தர வேண்டும் என்று அப்பகுதியின் தெரிவிக்கின்றனர்.