புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
புத்தாண்டு நள்ளிரவில் பிறந்ததையொட்டி சென்னை மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கியும், கேக் வெட்டியும் உற்சாகமாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி புத்தாண்டை வரவேற்றனர். இதனிடையே, புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சென்னையில் இருசக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களில் சென்ற 150க்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு விபத்துகளில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை, ஸ்டான்லி உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கொண்டாட்டங்களின்போது ஏற்படும் விபத்துகளில், உயிரிழப்பு நேராதவாறு சிகிச்சை வழங்க அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.