தமிழ்நாடு

சென்னையில் தண்ணீர் லாரி மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு

Rasus

சென்னையில் தண்ணீர் லாரி மோதி பள்ளி மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.

கேரளாவைச் சேர்ந்தவர் லிஜோ. இவரது மனைவி ஜினினா. இவர்களுக்கு ஜெமீமா அச்சு மேத்யூ (13) என்ற மகள் இருந்தார். லிஜோ கேரளாவில் விவசாயம் செய்து வருகிறார். இதனால் சென்னை கீழ்ப்பாக்கம் மண்டபம் சாலையில் மனைவி ஜினினா, மகளுடன் வசித்து வருகிறார்.

ஜெமீமா அச்சு மேத்யூ சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை தனது மாமா ஜீனுவுடன் பைக்கில் பள்ளிக்கு சென்றார் ஜெமீமா. அப்போது ஜீனுவின் மகள் கிஷியாவும் உடன் சென்றார். கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலை தாமோதரன் தெரு சந்திப்பில் செல்லும் போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த தண்ணீர் லாரி பைக்கில் இடித்தது. இதில் பின்னால் இருந்த மாணவி ஜெமீமா கீழே விழுந்தார். லாரி டயர் அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து சென்று தண்ணீர் லாரி ஓட்டுநர் கோவிந்தராஜை கைது செய்தனர். திருவள்ளூரைச் சேர்ந்த  அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மகள் இறந்த தகவல் கேரளாவில் உள்ள தந்தை லிஜோவுக்கு தெரிவிக்கப்பட்டதால் விமானம் மூலம் அவர் சென்னை வந்து கொண்டிருகிறார். விபத்தை நேரில் பார்த்த பெண் கூறுகையில், "விபத்து நடந்தவுடன் உயிருக்கு போராடிய மாணவியை காப்பாற்ற யாரும் உதவி செய்யவில்லை. மனத்திற்கு வேதனையை அளித்தது” என்றார்.

மாணவியின் உறவினர்கள் கூறுகையில், "பள்ளி நேரங்களில் லாரி வேகமாக செல்வதை போக்குவரத்து போலீசார் ஒழுங்குப்படுத்த வேண்டும். தண்ணீர் லாரிகள் வேகமாக செல்வதை போக்குவரத்து போலீசார் தடுத்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்றார்.

தகவல்கள்: சுப்பிரமணி, செய்தியாளர்.