தமிழ்நாடு

‘அசல் சான்றிதழை வாங்கி தாருங்கள்’ - ஏழை மாணவனுக்கு உதவிய சட்ட சேவைகள் ஆணையம்  

‘அசல் சான்றிதழை வாங்கி தாருங்கள்’ - ஏழை மாணவனுக்கு உதவிய சட்ட சேவைகள் ஆணையம்  

rajakannan

குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாத ஏழை மாணவருக்கு, தனியார் கல்லூரியிடம் இருந்து அசல் சான்றிதழ்களை சட்ட சேவைகள் ஆணையம் பெற்றுக் கொடுத்தது.

மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த ஏழை மாணவர் ஒருவர், சென்னையில் உள்ள சட்ட சேவைகள் ஆணையத்திடம் மனு ஒன்றினை அளித்துள்ளார். அந்த மனுவில், ‘நான் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பார்மரி கல்லூரியில் படித்து வருகிறேன். என்னுடைய தந்தைக்கு எதிர்பாராத விதமாக விபத்து நேரிட்டது. அதனால், என்னால் மேற்கொண்டு படிப்பினை தொடர முடியவில்லை. இதனையடுத்து, என்னுடைய அசல் சான்றிதழ்களை அளிக்குமாறு கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டேன். ஆனால், நான்கு ஆண்டு படிப்புக்கான தொகை ரூ4 லட்சத்தினை முழுமையாக செலுத்தினால்தான் சான்றிதழ்கள் திருப்பி தரப்படும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனால் சான்றிதழ்களை அளிக்க கல்லூரி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து சட்ட சேவைகள் ஆணைய அதிகாரிகள் உடனடியாக கல்லூரி நிர்வாகத்தினரிடம் தொலைபேசி வாயிலாக பேசினர். மாணவரின் ஏழ்மை நிலைமையை எடுத்து கூறினர். இதனையடுத்து, அதிகாரிகளின் விளக்கத்தை ஏற்றுக் கொண்ட கல்லூரி நிர்வாகம் அசல் சான்றிதழ்களை அனுப்பி வைத்தது. உடனடியாக அந்த மாணவரிடம் அதிகாரிகள் சான்றிதழ்களை ஒப்படைத்தனர். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மூன்று நாட்களில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஒரு ரூபாய் செலவு இல்லாமல் தன்னுடைய சான்றிதழ்கள் கிடைக்க உதவிய சட்ட சேவைகள் ஆணையத்திற்கு மாணவர் பாராட்டுக்களை தெரிவித்தார்.