தமிழ்நாடு

அமரர் ஊர்தி இல்லாததால் அவலநிலை :பிணத்தை சுமந்து செல்லும் பொதுமக்கள்

webteam

நாகையில் இறந்தவர்களின் உடலை எடுத்தச் செல்ல அமரர் ஊர்தி இல்லாததால் பிணத்தை 6 கிலோ மீட்டர் தூரம் வரை உறவினர்களே சுமந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.  

மணியன் தீவைச் சேர்ந்த நடராஜன் என்பவர் நேற்று சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரின் உடல் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் அவரின் உடல் இன்று மதியம் பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

ஆனால் அங்கிருந்து நடராஜனின் சொந்த ஊரான மணியன் தீவு கிராமத்திற்கு எடுத்துச் செல்வதற்கான அமரர் ஊர்தி வசதி அரசு மருத்துவமனையில் இல்லை. இதனால் அவரது உடலை 6 கிலோ மீட்டர் தூரம் வரை அவரது உறவினர்களே தூக்கி சென்றுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக இந்த பகுதிகளில் முறையாக அமரர் ஊர்தி வாகனம் செயல்படவில்லை எனவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. வேதாரண்யத்தை சுற்றியுள்ள அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி வசதி இல்லாததால் தொடர்ந்து இது போன்ற அவலநிலை நிகழ்ந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 
ஒரிசா போன்ற வடமாநிலங்களில் நிகழ்ந்து வந்த இது போன்ற சம்பவங்கள் தற்போது தமிழகத்திலும் தொடர் கதையாக மாறி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.