தமிழ்நாடு

ஆவின் பாலின் விலையை உயர்த்த அரசு திட்டம்?

ஆவின் பாலின் விலையை உயர்த்த அரசு திட்டம்?

webteam

வேலூர் தேர்தலுக்கு பிறகு ஆவின் பாலின் விலையை உயர்த்த அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

நகரவாசிகளின் பால் தேவையை தமிழக அரசின் ஆவின் பால் பெருமளவில் தீர்த்து வருகிறது. இந்நிலையில் கொள்முதல் விலை அதிகரிப்பால் ஆவின் பாலின் விற்பனை விலையும் அதிகரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலூர் தேர்தலுக்கு பின் விலை உயர்வு குறித்து அரசு அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் சட்டப்பேரவையில் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து பேசினார். 

கடைசியாக 2014ம் ஆண்டு ஆவின் பாலின் விலை லிட்டருக்கு ரூ.10 வரை உயர்த்தப்பட்டது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்க பொதுச் செயலாளர் ஜி.ராஜேந்திரன், மாடுகளின் பராமரிப்பு செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ரூ.40 ஆயிரத்துக்கு குறைவாக மாடுகளை வாங்கமுடிவதில்லை. வைக்கோல் போன்ற மாட்டு தீவனங்களும் விலை உயர்ந்துள்ளன. 

பால் உற்பத்தி விலையானது கடந்த 5 வருடத்தில் 63 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. எனவே பசு மாட்டின் பாலின் விலையை லிட்டர் ரூ.27ல் இருந்து ரூ.42ஆக உயர்த்த வேண்டும். அதே போல் எருமை பாலின் விலையை லிட்டர் ரூ.29ல் இருந்து ரூ.50 ஆக உயர்த்த வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் முதலமைச்சர் உடனான ஆலோசனையில் பால் விலை உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. வேலூர் தேர்தலுக்கு பிறகு பால் விலை உயர வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தார்.

பால் கொள்முதல் விலையை உயர்த்தி பால் விற்பனை விலையை உயர்த்தவில்லை என்றால் ஆவின் நஷ்டமடையும் என்றும் அதனால் பால் மட்டுமின்றி நெய், வெண்ணெய், ஐஸ் கிரீம் போன்ற பால் பொருட்களும் விலை உயர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்