ஆருத்ரா, ஆர்.கே.சுரேஷ் twitter
தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் ஆருத்ரா மோசடிக்கும் தொடர்பா? பின்னணி என்ன?

தொடர்ந்து ஓயாத பிரச்னையாக ஆருத்ரா மோசடி இருந்து வருவது ஏன், இந்நிறுவன மோசடியில் பாஜக பெயர் அடிபடுவது ஏன்? ஆருத்ரா மோசடி வழக்கில் தற்போது வரை என்ன நடந்துள்ளது என்பது குறித்து இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.

சண்முகப் பிரியா . செ

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், “ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் சதி திட்டம் உள்ளதாக சந்தேகம் உள்ளது. படுகொலை நடந்த உடனே சி.பி.ஐ விசாரணை வேண்டுமென பாஜகவின் குரல் இருந்து வருகிறது. ஆருத்ரா கோல்ட் நிறுவனத்திற்கும், பாஜகவை சார்ந்த சிலருக்கும் உள்ள தொடர்பு குறித்து ஒரு வருடத்திற்கும் மேலாக பேசப்பட்டு வருவதை பார்க்கிறோம். இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் பாஜகவின் பொறுப்பில் இருக்கிறார்கள். எனவே ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஆருத்ரா விவகாரமும் பேசப்படுகிறது” என்று கூறினார்.

தொடர்ந்து ஓயாத பிரச்னையாக ஆருத்ரா மோசடி இருந்து வருவது ஏன், இந்நிறுவன மோசடியில் பாஜக பெயர் அடிபடுவது ஏன் ? ஆருத்ரா மோசடி வழக்கில் தற்போது வரை என்ன நடந்துள்ளது என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

ஆருத்ரா கோல்டு நிறுவன கோப்பு படம்

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆரணி, கோயம்புத்தூர் உட்பட தமிழகம் முழுவதும் 20 இடங்களில் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் செயல்பட்டு வந்தது.

இந்நிறுவனம் , தங்களிடம் 1 லட்சம் ரூபாய் பணம் முதலீடு செய்தால் அதற்கு வட்டியாக மாதம் 36 ஆயிரம் வரை வழங்கப்படும் என்று தமிழ்நாடு முழுக்க விளம்பரம் செய்தது. இதனைத்தொடர்ந்து பலரும் இந்நிறுவனத்தில் பல லட்சம் ரூபாயை முதலீடு செய்தனர். ஆனால் முதலீட்டாளர்களுக்கு சரியான நேரத்தில் உரிய தொகையைக் கொடுக்காமல் மோசடி நடப்பதாக அந்நிறுவனத்தின் மீது புகார்கள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அத்தோடு ஆருத்ரா நிறுவனம் மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் தொடர்புடைய 26 இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில், 48 மடிக்கணினிகள், 60 சவரன் நகை, 3.41 கோடி ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து இந்த நிறுவனத்திற்குத் தொடர்புடைய 11 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டது. அத்தோடு அந்நிறுவனத்துக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர்.

மேலும், ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மீது மோசடி, கூட்டுச்சதி உட்பட ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவுசெய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இந்நிறுவனத்தின் இயக்குநர் பாஸ்கரன், மோகன்பாபு, ரூசோ, பட்டாபிராமன், ராஜசேகர், உஷா, ஹரீஷ், செந்தில்குமார், மைக்கேல்ராஜ் உள்ளிட்ட பலர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த நிதி மோசடி தொடர்பாக ஏற்கெனவே 21 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த சில மாதங்களில் மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளானர். அதோடு 40 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிடுள்ளது. அதேபோல, இந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ரூசோ உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் இந்நிறுவனம் மொத்தமாக 1,09,259 பேரிடம் சுமார் 2,438 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.

இது தொடர்பாகக் குற்றப்பிரிவு போலீஸார் 4,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை TNPID நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்த 96 கோடி ரூபாய் பணம் முடக்கப்பட்டதோடு இந்நிறுவனம் தொடர்பான 127 அசையா சொத்துகளும் முடக்கப்பட்டன.

இந்த நிலையில் பாஜக பிரமுகர்கள் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது வழக்கை இன்னும் விஸ்வரூபமடையச் செய்தது. ஆருந்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஹரீஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரை 11 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர்.

விசாரணையில் ஹரிஷ் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.84 கோடி வரை பெற்று கொடுத்துள்ளதும், ஆனால், அவருக்கு ஆருத்ரா நிறுவனத்திலிருந்து ரூ.130 கோடி கொடுக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. ஹரீஷ் ஆருத்ரா நிறுவனத்தின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக இருந்தபோது பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவில் மாநில செயலாளராக இருந்துள்ளார்.

அதேபோல ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகர் துபாயில் தலைமறைவாக இருந்த நிலையில், மோசடி வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஓபிசி பிரிவு துணைத் தலைவராக உள்ள ஆர்.கே.சுரேஷ்க்கு தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் ஆர்.கே . சுரேஷ் போலீசில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். அவருடைய செல்போனும் ஸ்விட்ச் ஆப்பில் இருந்தது. பின்னர் அவர் துபாய் தப்பி சென்றுவிட்டதாக தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் தான் தனது குடும்பத்தினருடன் துபாயில் இருப்பதால் தன்னால் நேரில் ஆஜராக முடியாது என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் போலீசார் விசாரணைக்கு ஆஜரானது குறிப்பிடத்தக்கது. இந்த ஆருத்ரா மோசடியில் சிக்கி பலர் தங்களது பணத்தை இழந்தது தமிழ்நாடு முழுக்க பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சூழலில்தான் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மீண்டும் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி பேசுபொருளாகியுள்ளது. ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட சிலர் பணத்தை வாங்கித் தருமாறு ஆம்ஸ்ட்ராங்கின் உதவியை நாடியுள்ளதாக தெரிகிறது. அவரும் அதற்கான முயற்சியை எடுத்துள்ளார்.

மறுபக்கம் நிறுவனத்திற்கு ஆதரவாக ஆற்காடு சுரேஷ் களமிறங்கி உள்ளார். இதில் ஏற்கெனவே ரவுடி தென்னரசு கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷ் மற்றும் ஆம்ஸ்ட்ராங் இடையே இருந்த பகை மேலும் வலுவடைந்துள்ளது. இந்த சூழலில்தான் கடந்த ஆண்டு பட்டினப்பாக்கத்தில் ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டார்.

இதன் பின்னணியில் ஒற்றைக்கண் ஜெயபால், அரக்கோணம் மோகன் உள்ளிட்ட கூலிப் படையினர் இருந்தனர் . அப்போது சம்பவ இடத்தில் பாம் சரவணன், ஆம்ஸ்ட்ராங் ஒன்றாக இருந்ததாக ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு தரப்பு கூறுவதாக தெரிகிறது. இதையடுத்துதான் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.