சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் நிறுவனத்தில் அதிக லாபம் தருவதாக பொதுமக்களை ஏமாற்றி பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆருத்ரா நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, விருதுநகர், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர் ஆகிய 37 இடங்களில் ஆருத்ரா நிறுவனத்திற்கு சம்பந்தப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும், அதன் தொடர்ச்சியாக வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு இடங்களிலும் மொத்தம் 57 இடங்களில் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். ஆருத்ரா நிறுவனத்தில் 1,09,255 பேர், இந்நிறுவனங்களில் 2,438 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆருத்ரா கோல்டு மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் உரிமையாளர்களாகச் செயல்பட்ட 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அதில் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில்குமார், பட்டாபிராம், மைக்கேல்ராஜ், ஹரீஷ், பேச்சிமுத்துராஜ் என்ற ரபீக், ஐயப்பன், ரூசோ, நாகராஜ், மாலதி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதன் கிளை நிறுவனமாக 6 நிறுவனங்களை தொடங்கி மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் குறித்து ஆதாரங்களுடன் தகவல் தெரிவித்தால் அவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூசோவிடம் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணை செய்ததில் நடிகரும் பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கு இதில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு நேரில் வந்து விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்பின் பாஜக நிர்வாகியும், இயக்குநருமான ஹரிஷை 11 நாட்கள் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். விசாரணையில் ஹரிஷ் பாஜகவில் பொறுப்பு வாங்க முதலீட்டாளர்களிடம் மோசடி செய்த பணத்தைப் பயன்படுத்தி இருப்பதும், அந்தப் பணத்தை பாஜகவில் சிலருக்கு வழங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது.
பணம் பெற்றுக்கொண்டு பாஜக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த அலெக்ஸ் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் பாஜகவைச் சேர்ந்த சுதாகர் ஆகியோர் பதவி வாங்கிக் கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் அசோக் நகரில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதில் அலெக்ஸ் நேரில் வந்து விளக்கம் அளித்தார்.
நிறுவனத்தின் இயக்குநரில் ஒருவரான மைக்கேல் ராஜிடம் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் ஏழு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மைக்கேல் ராஜ் பல திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக மைக்கேல் ராஜ் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் அனைத்துக் கிளைகளின் வங்கிக் கணக்குகளையும் கையாண்டது விசாரணையில் தெரிய வந்தது. முதலீட்டாளர்களிடமிருந்து பெற்ற சுமார் 1,749 கோடி ரூபாயை பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பரிவர்த்தனை செய்ததாக மைக்கேல் ராஜ் ஒப்புக்கொண்டு உள்ளார். மேலும் முதலீட்டாளர்களிடம் மோசடி செய்த பணத்தில் மைக்கேல் ராஜ் ரூ. 25 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை குவித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
தங்கள் பணத்தை பெற்றுத் தர பாஜக தலைவர் அண்ணாமலை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.பாதிக்கப்பட்டவர்கள்
இந்த வழக்கில் பாஜக நிர்வாகிகள் அதிகம் கைது செய்யப்படுவதால் பாதிக்கப்பட்டவர்கள், ’தங்கள் பணத்தை பெற்றுத் தர பாஜக தலைவர் அண்ணாமலை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்’ எனக் கூறி மாநில கட்சித் தலைமை அலுவலகத்துக்கு புகார்க் கடிதம் கொண்டு வந்தனர். இதனை அறிந்த பாஜக நிர்வாகிகள் என்ன செய்வது என்று தெரியாமல் அவர்களை சமாதானம் செய்து, ’காவல்துறை அதிகாரியை சந்திக்க வேண்டும் என்றும் உங்கள் விளக்கத்தை கட்சி அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும் என்றும் இதை அரசியலாக மாற்றக் கூடாது’ என்று கூறியும் திருப்பி அனுப்பி வைத்தனர். இவ்வழக்கில் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீசார் இதுவரை ரூ. 5.69 கோடி ரொக்கமாகவும், ரூ. 1.13 கோடி மதிப்பு தங்கம், வெள்ளிப் பொருட்களையும் கைப்பற்றி உள்ளனர். வங்கிக் கணக்கில் இருந்த பணம் ரூ. 96 கோடி முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய அசையா சொத்துகள் 97 கண்டறியப்பட்டு உள்ளது.
பாஜக அலுவலகம் சென்று முறையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது.காவல்துறை
இதுகுறித்து, “அமலாக்கத் துறை, வழக்கு விவரங்களைக் கேட்டிருப்பது கூடுதல் கவனம் பெற்றிருக்கிறது. பொருளாதாரக் குற்றப் பிரிவு காவலர் எண்ணிக்கை குறைவாக உள்ளனர். இதனால் வழக்கை, விசாரணை செய்வதில் தாமதம் ஆகலாம். 1990 காலகட்டங்களில் நிதி நிறுவனங்கள் தொடங்கி மோசடிகள் நடைபெற்றது. அந்த வழக்குகள் எல்லாம் நிலுவையில் உள்ளது. அதற்காக, பாஜக அலுவலகம் சென்று முறையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது” என போலீசார் தெரிவித்துள்ளனர்.
- ஆனந்தன்