தமிழ்நாடு

மருத்துவக் கலந்தாய்விற்கு ஆதார் அவசியம் : உயர்நீதிமன்றம்

மருத்துவக் கலந்தாய்விற்கு ஆதார் அவசியம் : உயர்நீதிமன்றம்

webteam

தமிழகத்தில் நடப்பாண்டு மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் ஆதார் அட்டை அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி விஞ்னயா உள்ளிட்ட ஏழுபேர், சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு எம்பிபிஎஸ் மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கையில் பிற மாநிலத்துவர்களும் விண்ணப்பித்துள்ளார்கள். பிற மாநில மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இரட்டை பூர்வீக சான்றிதழ் பெற்றுள்ளவர்களுக்கும் இடம் கிடைத்துள்ளது, எனவே தமிழகத்தில் உள்ள மருத்துவப்படிப்பு இடங்களை தமிழக மாணவர்களுக்கே ஒதுக்கவேண்டும். மேலும் வெளி மாநிலத்தவர்கள் தமிழகத்தில் இருப்பது போன்று போலி முகவரி அளித்து மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளதால் தங்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்று வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் வேறு மாநிலத்திலும் விண்ணப்பித்திருந்தார்களா என்ற விவரங்களை சேகரித்து அறிக்கை அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றம் உத்தரவிட்டபடி இந்தியா முழுவதும் ஆய்வு செய்வது கடினம் என்று மத்திய அரசு தெரிவித்தது. 

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதாகவும், அதற்கு அவகாசம் வேண்டும் எனவும் மத்திய அரசு வலியுறுத்தியது. இதைக் கேட்ட நீதிபதி, மத்திய அரசுக்கு கால அவகாசம் அளித்து இரண்டு வாரத்திற்கு வழக்கை ஒத்திவைத்தார். அதற்குள் மருத்துவக் கலந்தாய்வு நடத்தப்பட்டால் மாணவர்கள் ஆதார் அட்டையை காண்பிக்க வேண்டும் என கூறிய நீதிபதி கிருபாகரன், இதுகுறித்து இணையதளம், பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.