செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
சென்னை தி.நகர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் திமுகவின் 113வது வட்டச் செயலாளர் விஷ்ணு என்பவருக்கும் திருமணம் நிச்சயமாகி உள்ளது. இருவரும் வேவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கலப்புத் திருமணம் செய்து கொள்ள இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
இந்நிலையில், அதே பகுதியில் வசித்து வரும் சரவணன், கோபால கிருஷ்ணன், திரைப்படத் துறையில் (சினிமாவில் கிராபிக்ஸ்) பணியாற்றி வரும் நித்யானந்தம், பிரசன்னா ஆகியோர் நேற்று அந்த இளம் பெண்ணிடம் வேறொரு சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறாயா? ஏனக் கூறி ஆபாச வார்த்தைகளால் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்தப் பெண் விஷ்ணுவிடம் தெரிவித்துள்ளார். உடனே அவர், தனது நண்பர்கள் 15 பேருடன் அந்தப் பகுதிக்குச் சென்று சரவணன் உள்ளிட்டோரை கண்டித்துள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. இதில் சரவணன், நித்யானந்தம், பிரசன்னா, கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர். மேலும், விஷ்ணு உள்ளிட்ட 15 பேர் மீது காயமடைந்தவர்கள் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதே போல, அந்த இளம் பெண்ணும் 4 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் இருதரப்பு புகார்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். சாதியை மையப்படுத்தி தான், தன்னை இழிவாக பேசியதாகவும், அடிக்கடி கிண்டல் செய்து வந்ததாகவும் பாதிக்கப்பட்ட இளம்பெண் குற்றம் சாட்டி உள்ளார்.
மேலும், தாங்கள் தெருவில் சாலையோரமாக கடை போட்டுள்ளோம். அதனை வைத்த பிறகு தான் அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் உள்ளிட்ட சிலர் தன்னையும், தனது தாயாரையும் இழிவாக பேசி வருவதாகவும், இதை கட்சி பிரச்னையாக மாற்ற முயன்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். அவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்ட்ட இளம்பெண் தெரிவித்துள்ளார்.
ஆனால், தாக்குதலுக்குள்ளான சரவணன் உள்ளிட்ட அந்த தெருவைச் சேர்ந்தவர்கள் சாதி ரீதீயிலான எதுவும் திட்டவில்லை என்று மறுத்துள்ளனர். "தங்களை பற்றி போலீசில் பொய்யான தகவல்களை சொல்லி திமுக வட்டச் செயலாளர் விஷ்ணு மிரட்டுகிறார். திமுக மாவட்ட செயலாளர் சிற்றரசுவின் ஆதரவாளர்கள் தாங்கள். விஷ்ணு ஆயிரம்விளக்கு தொகுதி எம்எல்ஏ எழிலன் ஆதரவாளர். இதனால் தான் தங்களை மிரட்டுவதாகவும், சாதி ரீதியிலான பொய் புகார் கொடுக்க வைத்து மிரட்டுவதாகவும் அந்த தெரு மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
நேற்றிரவு நடந்த மோதல் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. அதில் விஷ்ணு தரப்பும், சரவணன் உள்ளிட்டோரும் மோதிக்கொள்வது பதிவாகி உள்ளது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த பிரச்னை தொடர்பாக செய்தி சேகரிக்க வரும் ஊடகங்களை அந்த தெருக்குள்ளேயே விடாமல் போலீசார் தடுத்தனர். அப்போது பொது மக்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. "இருதரப்பு புகார்களும் வந்துள்ளது. அது குறித்து தனித்தனியாக விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.