ராஜபகத் PT WEB
தமிழ்நாடு

தொலைந்து போன தந்தையின் செல்போன்; கூகுள் மேப் மூலம் திருடனைக் கண்டுபிடித்த மகன்! சுவாரஸ்யமான சேஸிங்!

நாகர்கோவில் கூகுள் மேப் மூலம் செல்போன் திருடிய நபருடன் சேர்த்து செல்போனையும் கண்டுபிடித்த இளைஞருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

webteam

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ பகத். இவர் டிஜிட்டல் வரைபட தொழில்நுட்ப வல்லுநராக வேலை செய்து வருகிறார். இவருடைய தந்தை பழனிச்சாமி ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் அதிகாரி. இவர் கடந்த 4 ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து திருச்சி செல்வதற்காக கச்சேகுடா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். ரயில் திருநெல்வேலி நோக்கிச் சென்று கொண்டிருந்த போது பழனிச்சாமியின் பை மற்றும் பையில் வைத்திருந்த தொலைப்பேசி காணவில்லை எனத் தெரிகிறது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், அருகில் இருந்த நபரிடம் செல்போன் வாங்கி தனது மகன், ராஜபகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

செல்போன் திருடிய நபர்

இந்த நிலையில், ராஜ் பகத் தனது உறவினர்கள் யார் எங்குச் சென்றாலும் அவர்கள் இங்கு இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக, கூகுள் மேப்பில் உள்ள லொக்கேஷன் ஆன் செய்து வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த லொக்கேஷன் ஆன் செய்து வைத்ததன் மூலம் தொலைப்பேசி எங்கு இருக்கிறது. என்று கண்டுபிடிக்க இயலும். தனது தந்தை கூறியதும் உடனே ராஜ பகத் தனது செல்போனில் லொக்கேஷனை பார்த்துள்ளார். அப்போது லொகேஷன் திருநெல்வேலி பகுதியில் இருந்துள்ளது.

இதனைத்தொடந்து, செல்போன் லொக்கேஷன் ரயில் நாகர்கோவில் ரயில் நிலையம் அருகில் காட்டியுள்ளது. அங்குச் சென்று ராஜபகத் பார்த்துள்ளார். கூட்டம் அதிகமாக இருந்ததால் திருடனைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. லொகேஷனை பின் தொடர்ந்த ராஜ பகத் இறுதியாக நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் வைத்து திருடனைப் பிடித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர் மது போதையில் இருந்ததால் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். தொடர்ந்து போலீசார் அவரிடம் சோதனை செய்ததில், செல்போன் மற்றும் 1000 ரூபாய் ரொக்க பணம், சார்ஜர் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட நபர் புகார் ஏதும் அளிக்காததால் போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் செல்போன் திருடிய நபரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.