தமிழ்நாடு

“என்னை கருணைக் கொலை செய்யுங்கள்” - குடியுரிமை கிடைக்காததால் இலங்கை தமிழர் விரக்தி

“என்னை கருணைக் கொலை செய்யுங்கள்” - குடியுரிமை கிடைக்காததால் இலங்கை தமிழர் விரக்தி

webteam

சேலத்தில் 28 ஆண்டுகளாக இலங்கை அகதியாக வசித்து வரும் இளைஞருக்கு இந்திய குடியுரிமை கிடைக்காததால், கருணைக் கொலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.

1955 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. குடியுரிமைச் சட்டத் திருத்தத்தில் முகாமில் உள்ள இலங்கை அகதிகள் சேர்க்கப்படவில்லை.

சேலம் தாரமங்கலம் அருகே  பவளதனூர் பகுதியிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் தர்மராஜ் லோகவதி தம்பதியினரின் மகன் யனதன் (28). இவர் கல்லூரியில் முதுகலை படிப்பு முடித்துள்ளார். 28 ஆண்டுகளாக தமிழகத்தில் வசித்து வரும், தனக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படாமல் இருப்பதால் தன்னை கருணைக் கொலை செய்யுமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள புகார் பெட்டியில் மனுவை போட்டுள்ளார்.

இது குறித்து யனதன் கூறும்போது கடந்த 1990 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து படகு மூலமாக இந்தியாவிற்கு வந்து சேர்ந்தோம். அப்போது சேலத்தில் உள்ள பவளதனூர் தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டு தற்போது வரை அகதியாக வாழ்ந்து வருகிறோம். கல்லூரி படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்றுள்ளேன்.

இருப்பினும் தற்போது வரை இந்திய குடியுரிமை கிடைக்காததால் மனவேதனை அடைந்துள்ளேன். தற்போதும் இந்திய குடியுரிமை சட்டத்திருத்தத்திலும் இலங்கை அகதிகள் சேர்க்கப்படாமல் உள்ளனர். இதனால் தன்னை கருணைக் கொலை செய்யுமாறு இந்திய குடியரசுத் தலைவர், தமிழக முதல்வர் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் அனைவருக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன் என்றும் தெரிவித்தார்.