தமிழ்நாடு

சமூக ஆர்வலர் முகிலன் மீது பாலியல் புகார்

சமூக ஆர்வலர் முகிலன் மீது பாலியல் புகார்

webteam

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மீது குளித்தலை மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். 

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம், நெடுவாசல் போராட்டம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், மணல் கடத்தலுக்கு எதிரான போராட்டம் எனப் பல்வேறு போராட்டங்களின் முன்னணியில் இருந்து செயல்பட்டவர் சமூக ஆர்வலர் முகிலன். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான முகிலன் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சில ஆதாரங்களை வெளியிட்டார். செய்தியாளர் சந்திப்புக்குப் பின்னர், மதுரை செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையம் சென்ற முகிலனை காணவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து முகிலன் காணமல் போனது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்தது. பின் அந்த வழக்கை சிபிசிஐடி போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். 

இந்நிலையில் புதிய திருப்பமாக சமூக ஆர்வலர் முகிலன் மீது பாலியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கரூரைச் சேர்ந்த பெண் ஒருவர் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தான் முகிலனுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு வந்தபோது, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி நெடுவாசல் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தங்கும் விடுதியில் தனக்கு முகிலன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தான் மறுத்த போது தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னிடம் உறவு வைத்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதனைத் தொடர்ந்து குளித்தலை போலிசார் முகிலன் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.