காவல் ஆய்வாளர் மீது பாலியல் புகார் கொடுத்த பெண் PT Tesk
தமிழ்நாடு

திருச்சி: காவல் ஆய்வாளர் மீது இளம்பெண் பாலியல் புகார்... ஆய்வாளர் சொல்லும் விளக்கம் என்ன?

காவல் ஆய்வாளர் மீது பெண்ணொருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். அதற்கு தன் மீது தவறு இல்லையென காவல் ஆய்வாளர் பதிலளித்துள்ளார்.

PT WEB

சென்னையை சேர்ந்த 27 வயது இளம் பெண்ணொருவர், திருச்சி பாலக்கரை பகுதியில் தங்கியிருந்து தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் எடுத்து வந்துள்ளார்.

இவர் சமீபத்தில் புகாரொன்று தொடர்பாக திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு சென்றிருந்த போது, அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் சுகுமார் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என்றும், தொடர்ந்து தன்னுடைய கைபேசி எண்ணிற்கு ஆபாசமாக புகைப்படங்கள் அனுப்பி பேசி வந்தார் என்றும் ஆன்லைன் மூலமாகவும், திருச்சி மாநகர காவல் ஆணையரை நேரில் சந்தித்தும் புகார் அளித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் இப்புகார்களை அவர் அளித்திருந்த நிலையில், தற்போது தன்னை சிலர் மிரட்டுவதாகவும், தன்னிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

பாலியல் புகார் கொடுத்த பெண்

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் சுகுமாரை புதிய தலைமுறை தொடர்பு கொண்டு கேட்டபொழுது, “என் மீது வேண்டுமென்றே குற்றம் சுமத்துகின்றனர். அப்பெண்தான் என்னிடம் தவறாக பேசினார். நான் பணியாற்றும் இடங்களுக்கு தாமாகவே முன்வந்து என்னிடம் பேச முயன்றார். வேறு ஒரு எண் மூலமாக நான் குறுஞ்செய்திகளை அனுப்பினேன் என்று சொல்கிறார். இப்புகாரை சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். நானும் புகார் அளித்துள்ளேன்.

அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், என்னிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. என் மீது எந்த தவறும் இல்லை” என தெரிவித்தார்.

காவல் ஆய்வாளர் மீது பெண்ணொருவர் பாலியல் புகார் அளித்துள்ளதும், அதில் தன் மீது தவறு இல்லையென காவல் ஆய்வாளர் பதிலளித்துள்ளதும் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.