தமிழ்நாடு

மின் இணைப்பு பெட்டி தீப்பொறி பற்றி உயிரிழந்த பெண் - அதிகாரிகள் விசாரணை

மின் இணைப்பு பெட்டி தீப்பொறி பற்றி உயிரிழந்த பெண் - அதிகாரிகள் விசாரணை

webteam

சென்னை சூளைமேட்டில் மின் இணைப்பு பெட்டியில் ஏற்பட்ட தீப்பொறியால் சாலையோரம் நடந்து சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை சூளைமேடு வீரபாண்டி நகரைச் சேர்ந்‌த லீமா ரோஸ். இவர் நேற்று வீட்டின் அருகே உள்ள மளிகைக்கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தெருவோரத்தில் இருந்த மின் இணைப்புப் பெட்டிக்கு கீழிருந்து மின்கடத்தும் கம்பியில் இருந்து தீப்பொறி ஏற்பட்டது. இந்தத் தீப்பொறி பட்டதில் லீமா ரோஸ் அணிந்திருந்த நைலான் நைட்டியில் தீப்பிடித்தது. இதனால் அலறித்துடித்த அவரை அப்பகுதியினர் மீட்டனர். இருப்பினும், அவர் உயிரிழந்தார்.

உடனே சம்பவ இடத்திற்கு தீப்பற்றிய மின் இணைப்புப் பெட்டியை மின்வாரிய ஊழியர்கள் சரி செய்தனர். தீப்பற்றியதற்கான காரணம் குறித்து சூளைமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்துச் சென்றுள்ளனர். எரிந்து போன மின்கம்பி உள்ளிட்டவை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் கோடம்பாக்கத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு காவல்துறையினர் கடிதம் மூலம் விளக்கம் கேட்டுள்ளனர். தீப்பொறி ஏற்பட்டது பற்றி மின்வாரிய அதிகாரிகளும் துறைரீதியாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்த லீமா ரோஸ் தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்டவர். அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் துப்புரவு பணி செய்து வந்த லீமா, சற்று மனநலம் குன்றிய மகனை தனியாளாக வளர்த்து வந்தார். இறப்பதற்கு முன் லீமா அளித்த வாக்குமூலத்தின்படி, தாம், செல்போன் பேசிக்கொண்டே வந்ததாகவும், அப்போது மின் இணைப்புப்பெட்டி வெடித்ததாகவும் மின்கம்பியில் இருந்து தீப்பொறி ஏற்பட்டு தனது உடையில் பட்டு தீப்பிடித்ததாகவும் கூறியுள்ளார்.