தமிழ்நாடு

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை குணமாக்கிய தன்னார்வ அமைப்பு

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை குணமாக்கிய தன்னார்வ அமைப்பு

webteam

தாயை பிரிந்து தவித்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண், புதிய தலைமுறை செய்தி எதிரொலியால் சிகிச்சை கிடைத்து தற்போது அவர் குணமடைந்துள்ளார்.

கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகள் ஜெபசெல்வி. கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் ராமச்சந்திரன் மற்றும் மகள் ஜெபசெல்வியை விட்டு அவரது தாய் வேறு வாழ்வு தேடி சென்றுள்ளார். தாயின் பிரிவு தந்த ஏக்கம் ஜெபசெல்வியை மன நோயாளியாகவே மாற்றி விட்டது. தாயின் மீது கொண்ட பற்றால், தினமும் தாயை தேடி கரூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஜெப செல்வி சுற்ற தொடங்கியதால் வேறு வழியின்றி அவரது குடும்பத்தினர் அவரை சங்கிலியால் கட்டி வைத்தனர். இவரது நிலை குறித்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிய தலைமுறையில் செய்தி வெளியானது.

அந்தச் செய்தியை பார்த்த புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகம் நடத்திவரும் வீரமணி கரூர் மாவட்டம் ராயனூர் சென்று உரிய விதிமுறைகளை பின்பற்றி போலீசாரின் ஒப்புதலோடு ஜெப செல்வியை கந்தர்வகோட்டை அழைத்து வந்து அவரை கருணையோடு கவனித்து, தேவையான சிகிச்சைகளையும் மருத்துவர்களைக் கொண்டு வழங்கியுள்ளார்.

ஒரு புறம் அக்கறை கலந்த அன்பு, மறுபுறம் மருத்துவ சிகிச்சை என இரண்டும் சேர, இன்று பூரண குணமடைந்து புன்னகையோடு புது வாழ்கையை வரவேற்றுள்ளார். இதனையறிந்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அந்தப் பெண்ணை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வரவழைத்து அவருடன் கலந்துரையாடினார்.

ஜெப செல்வியின் பேச்சைக் கேட்ட புதுக்கோட்டை எஸ்பி பாலாஜி சரவணன், அவரை பாதுகாப்பாக, அவரது பாட்டியுடன் அனுப்பி வைக்க வழிவகை செய்வதோடு அந்தப் பெண்ணிற்கு நிரந்தர வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் சில வழிமுறைகளையும் அவருக்கு செய்து கொடுத்தார். மேலும் அந்த பெண்ணிற்கு இனிப்புகள் வழங்கி, தன்னால் முடிந்த தொகையை அன்பளிப்பாக கொடுத்து அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.