மாற்றுத்திறனாளி ஸ்ரீகாந்த் PT
தமிழ்நாடு

மதுரை கலைஞர் நூலகத்தில் 4 மாதங்களாக இடைவிடா படிப்பு; வங்கி தேர்வில் சாதித்த பார்வை மாற்றுத்திறனாளி!

மதுரையில் கலைஞர் நூலகத்தில் 4 மாதங்களாக இடைவிடாமல் படித்த பார்வை மாற்றுத்திறனாளி ஸ்ரீகாந்த், தனியார் வங்கி நடத்திய போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று, இளநிலை உதவி மேலாளராக தேர்வாகி உள்ளார்.

PT WEB

மதுரையில் கலைஞர் நூலகத்தில் படித்து வந்த ஆட்டோ ஓட்டுநரின் பார்வை மாற்றுத்திறனாளி மகன், வங்கித் தேர்வில் தேர்ச்சி பெற்று இளநிலை உதவி மேலாளர் பதவிக்கு தேர்வாகி உள்ளார்.

மதுரையில் 215 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை, கடந்த ஆண்டு ஜூலை 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் 6 தளங்களைக் கொண்ட இந்த நூலகத்தில் 60 கோடி ரூபாய்க்கு மூன்றரை லட்சம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு கலைக்கூடம், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவு, மாநாட்டுக்கூடம், ஓய்வறை, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, டிஜிட்டல் நூலகம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. நூலகத்தில் மாற்றுத்திறனாளிகள் வசதிக்கேற்ப தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக பிரிவில், 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.

மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மாரிமுத்து - அங்குச்செல்வி தம்பதியின் மகனான பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஸ்ரீகாந்த், தனது கடின உழைப்பின் காரணமாக பி.ஏ., பி.எட்., படித்து பட்டம் பெற்றார். பின்னர் போட்டி தேர்வு எழுதி அரசு பணிக்கு செல்ல வேண்டும் என விருப்பம் கொண்ட ஸ்ரீகாந்த், டி.என்.பி. எஸ்.சி, வங்கி தேர்வு உள்ளிட்ட தேர்வுகளை எழுதி வந்துள்ளார்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, மதுரை நத்தம் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலக மாற்றுத்திறனாளிகள் பிரிவில் வைக்கப்பட்டுள்ள போட்டி தேர்வுக்கான பிரெய்லி புத்தகங்களை படிக்க தொடங்கியுள்ளார். 4 மாதங்களாக இடைவிடாமல் படித்த ஸ்ரீகாந்த், தனியார் வங்கி நடத்திய போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று, இளநிலை உதவி மேலாளராக தேர்வாகி உள்ளார்.

இது குறித்து ஸ்ரீகாந்த் பேசியபொழுது,

"தனியார் வங்கியில் உதவி மேலாளராக தேர்வாகி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கலைஞர் நூலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவு உபயோகமாக இருந்தது. இதனால் 4 மாதங்களாக விடாமுயற்சியுடன் படித்து தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன்" என்றார்.

”கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பிரிவை பயன்படுத்தி, என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் பயன்பெறவேண்டும் .மேலும் பேருந்து நிறுத்தத்தில் இருந்து கலைஞர் நூலகத்திற்கு வருவது சிரமமாக உள்ளது ஆகவே, கலைஞர் நூலக வாயிலில் பேருந்தை நிறுத்திச்செல்ல வழிவகை செய்ய வேண்டும்” என வேண்டுகோள் வைத்துள்ளார்.

அதோடு, ”கலைஞர் நூலகத்தில் படிக்கும் மாற்றுத்திறனாளிகள் மதிய உணவிற்காக நீண்ட தூரம் சென்றுவரவேண்டிய நிலை இருப்பதால், நூலகத்துக்குள்ளேயே கேன்டீன் வசதி ஏற்படுத்தி தரவேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.