தமிழ்நாடு

சுதந்திரம் முதலே பேருந்து வசதி இல்லாத கிராமம்-முதல் பேருந்தை கட்டியணைத்து வரவேற்ற மக்கள்

சுதந்திரம் முதலே பேருந்து வசதி இல்லாத கிராமம்-முதல் பேருந்தை கட்டியணைத்து வரவேற்ற மக்கள்

webteam

ராமநாதபுரம் கமுதி அருகே சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து பேருந்து வசதி இல்லாத கிராமத்திற்கு, முதன்முதலாக பேருந்து வந்ததையடுத்து மாணவர்கள் பேருந்தை கட்டியணைத்து தேங்காய், பழம், மாலை அணிவித்து கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழவலசை கிராமம் உள்ளது. அங்கு 100க்கும் மேற்பட்ட விவசாயக் கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லாததால், பேருந்துக்காக கீழவலசை கிராமத்திலிருந்து செங்கப்படைக்கு நான்கு கிலோ மீட்டர் தொலைவிற்கும், அதேபோல் கீழவலசை கிராமத்திலிருந்து பேரையூர் கிராமத்திற்கு ஐந்து கிலோ மீட்டருக்கும் மேல் கடந்து தினந்தோறும் வேலைக்கு செல்வோர், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் நடந்து சென்று வந்தனர்.

இதனால் கடந்த பல ஆண்டுகளாக தங்களது கிராமத்திற்கு பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் பல ஆண்டுகளாக வைக்கப்பட்டு வந்த கிராமங்களின் கோரிக்கையை ஏற்று, சுதந்திரம் அடைந்த காலத்திற்கு பிறகு இன்று கீழவலசை கிராமத்திற்கு பேருந்து வந்தது. இதனையடுத்து நெகிழ்ச்சியடைந்த பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் பேருந்தை கட்டியணைத்து வரவேற்பு அளித்ததோடு, அரசு பேருந்துக்கு மாலை அணிவித்து தேங்காய், பழம் ஊதுபத்தி வைத்து வழிபட்டு, பின்னர் பெண்கள் குலவை விட்டு ஆரவாரத்துடன் பேருந்தை வழி அனுப்பி வைத்தனர்.