தமிழ்நாடு

மகன் வாங்கிய கடனை அடைக்க முடியாத விரக்தியில் மூத்த தம்பதியர் எடுத்த விபரீத முடிவு

மகன் வாங்கிய கடனை அடைக்க முடியாத விரக்தியில் மூத்த தம்பதியர் எடுத்த விபரீத முடிவு

webteam

மணவாளக்குறிச்சியில் மகன் வாங்கிய கடனை அடைக்க முடியாத விரக்தியில் தம்பதியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி வடக்கன்பாகம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆறுமுக பெருமாள் - பிரேமலதா தம்பதியர். ஆறுமுக பெணருமாள் சென்னை துறைமுகத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர்களது மகன்களான ஆதவன், மாலன் ஆகிய இருவரும் சென்னையில் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆதவன், சென்னையில் தனியாக நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்த நிலையில், கொரோனா காரணமாக கடந்த 2 வருடமாக அந்த நிறுவனம் பெரும் நஷ்டமடையத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அவருக்கு நிறைய கடன் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கடனை அடைக்க மணவாளக்குறிச்சியில் உள்ள தனது தந்தையிடம் ஆதவன் உதவி கேட்டதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து ஆறுமுக பெருமாள் குடும்ப சொத்தை விற்று ஆதவனுக்கு பணம் தருவதாக கூறியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து சொத்தை விலை பேசி அட்வான்ஸ் தொகையும் வாங்கிய நிலையில், குறித்த நேரத்தில் பத்திரப்பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது இதனால் தக்க சமயத்தில் மகனுக்கு உதவ முடியவில்லை என்று ஆறுமுக பெருமாள் கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு வழக்கம்போல் அவரது மகன் பேசுவதற்காக சென்னையில் இருந்து தந்தையின் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் ஆறுமுக பெருமாள் செல்போனை எடுக்காததால் சந்தேகடைந்த மகன் மணவாளக்குறிச்சியில் உள்ள அவரது உறவினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற உறவினர்கள் வீட்டை பார்த்தபோது முன்பக்க கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது. உடனே அவர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது தம்பதியர் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணவாளக்குறிச்சி போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.