police investigation pt desk
தமிழ்நாடு

குடும்பத் தகராறில் இரண்டு குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு - நாமக்கல்லில் சோகம்

நாமக்கல் அருகே தனது இரண்டு மகன்களை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

webteam

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம் ஜேடர்பாளையத்தை அடுத்துள்ள வெட்டுக்காட்டு புதுரைச் சேர்ந்தவர்கள் தனசேகரன் (31) - சசிகலா (26) தம்பதியர். இவர்கள் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது. இவர்களுக்கு திவித் (5), தர்ஷன் (3) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

sasikala

இந்நிலையில் இவர்களுக்குள் கடந்த சில மாதங்களாக குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இதையடுத்து நேற்றிரவும் தனசேகரன் குடிபோதையில் வந்ததால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்று காலை சசிகலா, தனது 2 குழந்தைகளையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு அவர்களது விவசாய தோட்டத்திற்குச் சென்றுள்ளார்.

அந்நேரத்தில் சசிகலாவை பார்க்க வந்த அவரது தந்தை, வீட்டில் சசிகலா இல்லாததால் அவர்களை தேடி விவசாய தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கும் அவர்கள் இல்லாததால் தோட்டத்தில் உள்ள கிணற்றுப் பகுதிக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு குழந்தைகளின் உடல்கள் தண்ணீரில் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்ததுடன் நல்லூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

well

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கிணற்றில் இருந்து குழந்தைகள் உடலையும், உடனிருந்த தாயின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சசிகலா தனது இரண்டு மகளையும் கிணற்றில் தூக்கி வீசிவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.