பயங்கர தீ விபத்து pt desk
தமிழ்நாடு

ஓசூர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து... 6 மணி நேரமாக போராடும் தீயணைப்புத்துறை

ஓசூர் அருகே டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து... 6 மணி நேரமாக போராடி வரும் தீயணைப்புத் துறையினர்.

PT WEB

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே நாகமங்களம் பகுதியில் திம்ஜேப்பள்ளியில், 500 ஏக்கர் பரப்பளவில் டாடா தொழிற்சாலை இயங்கி வருகிறது. செல்போன் உதிரி பாகங்கள் தயார் செய்யும் இந்த தொழிற்சாலையில், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஒரு ஷிப்டில் சுமார் 1500 முதல் 2000 பேர் வரை பணியாற்றுகின்றனர். இந்த நிலையில், இன்று அதிகாலை 5.30 மணியளவில் யூனிட் 4-ல் கெமிக்கல் டேங்க் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தீ கொழுந்துவிட்டு எரிந்து அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்து. இதில் ஆறு பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு ஓசூர் தனியார் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஓசூர், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி, பர்கூர், மேட்டூர் அனல் மின் நிலையம், தர்மபுரி பாலகோட் மற்றும் கர்நாடகா மாநிலம் பெங்களூர் பகுதியில் இருந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், 6 மணி நேரத்திற்கும் மேலாக தீயை போராடி அணைத்து வருகின்றனர். தீ அணைக்கும் பணிக்கு இடையே கெமிக்கல் டேங்க் வைக்கப்பட்டிருந்த மேல் தளம் சரிந்து விழுந்தது. இதனால் மேலும் தீ அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் தீ விபத்து ஏற்பட்டபோது தொழிற்சாலையில் இருந்த 3000 தொழிலாளர்களை பாதுகாப்பாக வெளியேற்றி உள்ளனர். தொடர்ந்து இன்று தொழிற்சாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் பாதிக்கப்பட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை மாவட்ட ஆட்சியர் சரயு நலம் விசாரித்து உரிய சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டார். மேலும் விபத்து நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு, தீ விபத்து குறித்த காரணத்தை நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

இதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். பாதுகாப்பு கருதி நிறுவனம் முன்பாக 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.