தேனி சங்ககோனான்பட்டியை சேர்ந்த முத்து 2010-ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். 14 ஆண்டுகளாக பணியாற்றி வந்த அவர், கடந்த பத்தாம் தேதி பணியில் இருந்த போது, உயிரிழந்தார். முத்துவின் உடல் தனி விமான மூலம் மதுரை கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து அமரர் ஊர்தி மூலம் தேனி பங்களா மேட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்ட முத்துவின் உடலுக்கு அவரது தாயார், மனைவி, உறவினர்கள், பொதுமக்கள், நண்பர்கள் அஞ்சலி செலுத்தினர்.
முத்துவுக்கும், மதுரையைச் சேர்ந்த ரீனாவிற்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தேனி பங்களா மேடு, நேரு சிலை சந்திப்பு வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, தேனி - அல்லிநகரம் மின் மயானத்திற்கு உடல் கொண்டு வரப்பட்டது.
அங்கு அஞ்சலிக்கு வைக்கப்பட்ட முத்துவின் உடலுக்கு, பெரியகுளம் சார் - ஆட்சியர் ரஜத் பீடன், மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தினார். மதுரை என்சிசி பட்டாலியன் கர்னல் ராகேஷ் குமார், திருவனந்தபுரம் ரெஜிமண்ட் மேஜர் அஜந்தர் தலைமையில் மலர்வளையம் வைத்து ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து மறைந்த ராணுவ வீரர் முத்துவிற்கு 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.
பின், குடும்ப வழக்கப்படியான சம்பிரதாய சடங்குகளையடுத்து ராணுவ வீரரின் உடல் தேனி -அல்லிநகரம் நகராட்சி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.