தமிழ்நாடு

என்னடா செல்லம் கரும்பு லாரியவே காணாம்: குட்டியுடன் சாலையில் உலாவந்த காட்டுயானை

என்னடா செல்லம் கரும்பு லாரியவே காணாம்: குட்டியுடன் சாலையில் உலாவந்த காட்டுயானை

webteam

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே குட்டியுடன் நடமாடிய காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அவ்வப்போது பகல் நேரங்களில் சாலையில் நடமாடுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று காலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை தனது குட்டியுடன் தமிழக கர்நாடக எல்லையில் உள்ள புளிஞ்சூர் அருகே சாலையில் நடமாடியது. குட்டி யானையுடன் தாய் யானை சாலையில் நடமாடுவதை கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். அப்போது சாலையில் நின்றிருந்த ஒரு சரக்கு லாரியை நோக்கி காட்டு யானை தனது குட்டியுடன் வருவதை கண்ட வாகன ஓட்டுனர் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து வாகனத்தின் அருகே வந்த காட்டு யானை தனது குட்டியுடன் வாகனத்தின் பக்கவாட்டில் கடந்து சென்றது. தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்திற்கு கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளில் இருந்து கரும்பு துண்டுகளை பறித்து தின்று பழகிய காட்டு யானைகள் சாலையில் நடமாடுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். சாலையில் காட்டு யானை தனது குட்டியுடன் நடமாடிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.