செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இவர் தற்போது அவரது இயக்கத்தில் வெளிவந்துள்ள 'வாழை' திரைப்படம் தமிழக ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மாரி செல்வராஜ் தனது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுத்திருப்பதாக கூறியிருந்தார்.
இந்த படத்தில் ஒரு காட்சி வரும். அந்தக் காட்சியில் வாழைத்தார்களை ஏற்றிச் செல்லும் லாரி கவிழ்ந்து அதன் மேல் பயணம் செய்த 19 பேர் உயிரிழந்த சம்பவத்தை வைத்து உருவானது தான் வாழை திரைப்படம். இந்த கோர விபத்தில் மாரி செல்வராஜின் சொந்த ஊரான புளியங்குளத்தை சேர்ந்த 15 பேரும், அருகே உள்ள நாட்டார்குளத்தைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். மாரி செல்வராஜின் உடன் பிறந்த சகோதரியும் இந்த விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கொடூர கோர விபத்தில் சிக்கிய லாரியில், புளியங்குளத்தைச் சேர்ந்த செந்தூர் பாண்டி என்பவர் பயணம் செய்துள்ளார். இது குறித்து அவரிடம் நாம் பேசியபோது, பல திகிலூட்டும் அனுபவத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டார்...
தினமும் வாழைத்தார்களை சுமப்பதற்காக லாரியில் தான் செல்வோம். அன்று லாரி வரவில்லை என்பதால் வேனில் சென்றோம். அன்றைய தினம் 5 லாரிகளில் வாழைத்தார்களை ஏற்ற வேண்டும் என்று கூறியதால் எங்கள் ஊரில் இருந்தும நாட்டார்குளத்தில் இருந்தும் ஆட்கள் வந்திருந்தார்கள். தினமும் பல்வேறு இடங்களுக்கு வாழைத்தார்களை சுமப்பதற்காக செல்வோம். ஆனால், விபத்து நடந்த அன்று ஏரல் அருகே உள்ள மாங்கொட்டாபுரத்திற்கு வாழைத்தார்களை ஏற்றுவதற்காகச் சென்றோம்.
அப்போது 5வது லாரியில் லோடு ஏற்றி முடிப்பதற்கு மாலை 5 மணிக்கு மேல் ஆகிவிட்டது. எங்களை கொண்டு போய் விட்ட வேனும் இல்லாத காரணத்தால் வேறு வழியில்லாமல் தார்ப்பாய் போர்த்திய வாழைத்தார் லோடு லாரியில் ஏறினோம். ஆப்போது லாரி, பேட்மாநகரம் தாண்டி, குளத்துக் கரையில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக லாரி வயலுக்குள் சரிந்தது. இதில் லாரியில் பயணம் செய்தவர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். நான் லாரியில் பின்னால் இருந்ததால் லாரியில் இருந்து சகதிக்குள் குதித்து தப்பித்தேன்.
அப்போது பலரது கால்கள் சகதியில் துடித்துக் கொண்டிருந்தது. ஐயோ, அம்மா, கடவுளே, காப்பத்துங்க என்று எங்கும் மரண ஓலம் கேட்டது. லாரியில் இருந்து என்னைப்போல் தப்பியவர்கள் உள்ளே சிக்கியவர்களை காப்பாற்ற முயற்சித்தோம். ஆனால். அவர்களை காப்பாற்ற முடியவில்லை. ஒரு சில நிமிடங்களில் சகதியில் சிக்கித் துடித்த கால்கள் சோர்ந்து, சகதியோடு சகதியாக மாண்டனர்.
அதன் பின்னர் அந்த வழியாக வந்த ஒரு தனியார் பேருந்தில் சகதியோடு ஏறி ஊருக்கு வந்தேன். பின்னர் விபத்து குறித்து ஊரில் இருந்தவர்களிடம் கூறி ஆட்களோடு விபத்து நடந்த இடத்திற்கு ஓடினோம். ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.
விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற பேட்மாநகரம் மக்கள் எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இந்த கோர விபத்தில் 19 பேர் உயிரிழந்ததை வாழை படத்தின் வாயிலாக கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் மாரி செல்வராஜ்” என்று கனத்த இதயத்துடன் செந்தூர் பாண்டி பகிர்ந்து கொண்டார்.